தமிழ், Human Security

தென்னிலங்கையில் பிரபலமாகும் அரசாங்கத்தின் போர் அணுகுமுறை

அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய தேசிய ரீதியில் பிரச்சினைக்குரிய ஐந்து முக்கிய விடயங்களை அவர்களின் கணிப்பின் படி முக்கியத்துவத்தின் அடிப்படையில் அவற்றை தரப்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டபோது‚ தென் இலங்கை சிங்கள மக்களில் 28.1் சதவீதமானவர்கள் பொருளாதாரத்தையும் 22.7 சதவீதமானவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் காணப்படும் மோதல் என்பதையும் 19.8 சதவீதமானவர்கள் இலங்கையின் சமாதானச் செயற்பாடு என்பதையும் 15 சதவீதமானவர்கள் சட்டமும் ஒழுங்கும் என்பதையும் 13.7 சதவீதமானவர்கள் ஊழல் என்பதையும் தமது முதல் தெரிவாக குறிப்பிட்டுள்ளனர்.

சிறுபான்மை சமூகத்தவர்களை பொருத்தவரையில்‚ பொருளாதாரத்தை 27.4 சதவீதமான மலையகத் தமிழர்களும்‚ 33.5 சதவீதமான முஸ்லிம் சமூகத்தவர்களும் தெரிவு செய்திருந்தனர். வடக்கு மற்றும் கிழக்கில் காணப்படும் மோதல் என்பதை தெரிவுசெய்த முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழர்கள் முறையே 16.0‚ 16.9 சதவீதத்தினராகும். இலங்கையின் சமாதானச் செயற்பாடு என்பதை 29.2 சதவீதமான முஸ்லிம் சமூகத்தவர்களும்‚ 25.2 சதவீதமான மலையகத் தமிழர்களும் தெரிவுசெய்திருந்தனர்.

இந்த புள்ளிவிபரங்கள் கடந்த வாரம் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கருத்துக் கணிப்புப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் வெளியிடப்பட்ட 2008 பங்குனி மாத “சமாதான நம்பிக்கைச் சுட்டி” (பீ.சீ.ஐ) ஆய்வு முடிவு அறிக்கையில் உள்ளவை. இவ் ஆய்வானது 2001ல் ஆரம்பிக்கப்பட்டு சமனான கால இடைவெளியில் நடாத்தப்பட்டு வருகின்ற சமாதான நம்பிக்கைச் சுட்டி எனும் ஆய்வுத் தொடரின் 28 வது ஆய்வாகும்.

மேற்படி புள்ளிவிபரங்களின் படி தென் இலங்கை சிங்கள சமூகத்தில் இரண்டில் ஒரு பகுதியினருக்கு இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினையுடன் தொடர்புபட்ட விடயங்கள் முக்கியமானவையாக தென்படுகின்றது என்று கொள்ளலாம். ஆனால்‚ இந்த விடயம் தொடர்பில் அவர்களின் மற்றைய அபிப்பிராயங்கள்‚ அறிவு என்பவற்றை பார்க்கும் போது சற்று கவலை தரும் விதத்தில் அவை அமைந்திருப்பதுடன்‚ அவை ஆழமான பல கருத்துகளை வெளிப்படுத்துபனவாக கொள்ளத்தக்கவை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனமான மஹிந்த சிந்தனையில் இலங்கை பிரச்சினை தொடர்பில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களை மீள பார்த்தோமானால்‚ ‘வடக்கு கிழக்கு போராட்டம் மீது புதிதாகச் சிந்திப்பதற்கும் ஓர் தீர்வை உருவாக்குவதற்கு புதியதோர் அணுகுமுறையைக் காண நான் உறுதி பூண்டுள்ளேன். கடந்த காலத்தில் இத்தொடர்பில் எடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளினதும் சாதகங்களையும் பாதகங்களையும் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு நான் புதிய பாதையொன்றைப் பின்பற்றுவதற்கு நான் உத்தேசித்துள்ளேன். அத்தகைய பாதையை கட்டியெழுப்புவதற்கான அடிப்படை ‘பிரிக்கப்படாத நாடு – பெரும்பான்மையோர்கள் இணக்கப்பாடு – கெளரவமான சமாதானம்’ என்பதாகவிருக்கும்’ என்று கூறப்பட்டிருந்தது.

மேலும்‚ ‘நான் பதவியேற்றவுடன் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சகல சனநாயகக் கட்சிகளுடனும் மேலே குறிப்பிட்ட கொள்கை அடிப்படையில் நான் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவேன். பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத அரசியல் கட்சிகளுடனும் கூட நான் இதைப் போன்ற கலந்துரையாடல்களைச் மேற்கொள்ளத் தொடங்குவேன்’ என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த பிரச்சினை தொடர்பில் சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவும்‚ முழுமையான போரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அணுகுமுறையாக இருந்தது என்று கூறலாம். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று ஆறு மாதத்தின் பின்னர் சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழு அமைக்கப்பட்டது. ஆரம்பம் தொட்டு இராணுவ முன்னெடுப்பு சிறிது சிறிதாக மும்முரப்படுத்தப்பட்டு வந்தாலும்‚ இந்த வருடம் தை 16ம் திகதியுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு யுத்த முன்னெடுப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து தை 24ம் திகதி சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழு தனது யோசனைகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள்‚ 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தினை அடிப்படையாக கொண்டு அமைந்திருந்தது.

ஆரம்பத்தில் சர்வ கட்சி பிரதிநிதித்துவ குழுவில் மக்கள் விடுதலை முன்னணியும் அங்கம் வகித்தாலும்‚ பின்னர் அதில் இருந்து விலகியது. சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள் முன்வைக்கப்பட்ட பின்னர் சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழு மற்றும் அதன் யோசனைகள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கடுமையான விமர்சனங்களை வெளியிட்டது. 13வது திருத்தச்சட்டத்தினை செயற்படுத்த தாம் ஒருபோதும் இடம் கொடுக்கப்பபோவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்தது. சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழுவினை கலைத்து அதிகாரப் பகிர்வு திட்டங்கள் தொடர்பில் கலந்தாலோசிப்பதை கைவிடுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டது.

பங்குனி மாத “சமாதான நம்பிக்கைச் சுட்டி” (பீ.சீ.ஐ) ஆய்வு அறிக்கையில் இந்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்களின் அபிப்பிராயங்கள் வெளியிடப்படடுள்ளன.
தெற்குப் பெரும்பான்மையினரின் கருத்தை அரசியல் தீர்வொன்றிற்கு கொண்டு வருவதில் சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழுவின் செயற்திறன் தொடர்பில் நீங்கள் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்று கேட்கப்பட்ட போது 45.6 சதவீதமான சிங்கள சமூகத்தவர்கள் சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழு தொடர்பில் தாம் எதுவும் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். 22.6 சதவீதமான சிங்கள சமூகத்தவர்கள் இது தொடர்பில் தெரியாது என்று தெரிவித்துள்ளனர். 14.3 சதவீதமான சிங்கள சமூகத்தவர்கள் சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழுவின் செயற்திறன் மீது எந்தவித நம்பிக்கையுமில்லை என்று கூறுகின்றனர். ஆக‚ 17.5 சதவீதமான சிங்கள சமூகத்தவர்கள் மட்டுமே தெற்குப் பெரும்பான்மையினரின் கருத்தை அரசியல் தீர்வொன்றிற்கு கொண்டு வருவதில் சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழுவின் செயற்திறன் தொடர்பில் நம்பிக்கையுள்ளது என்ற தெரிவித்துள்ளனர்.

சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழு தொடர்பில் தாம் எதுவும் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்தவர்களில் முஸ்லிம் சமூகத்தவர்கள் 62.4 சதவீதமாகவும்‚ மலையகத் தமிழர்கள் 43.2 சதவீதமாகவும் காணப்படுகிறது.

சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழு பற்றி தெரிந்த தென் இலங்கை சிங்கள மக்களிடம் சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழுவில் உள்ளடக்கப்பட வேண்டிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவ மட்டங்கள் தொடர்பிலான அவர்களின் திருப்தி பற்றி கேட்ட போது 10.9 சதவீதத்தினர் மட்டுமே திருப்தியடைவதாக தெரிவித்துள்ளனர்.

அதே போல்‚ மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் ‘சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழுவினை கலைத்து அதிகாரப் பகிர்வு திட்டங்கள் தொடர்பில் கலந்தாலோசிப்பதை கைவிடுமாறு’ கேட்டுக்கொண்டுள்ளது’ என்பது பற்றி கேட்ட போது‚ சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழு பற்றி தெரிந்த தென் இலங்கை சிங்கள மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் இந்த கருத்துடன் உடன்படுவதாகவும்‚ அதே அளவானவர்கள் உடன்படவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தால் இனப்பிரச்சினை தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற இரண்டு விதமான அணுகுமுறைகளாக ஒரு பக்கம் சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழுவும் மற்ற பக்கம் இராணுவ முன்னெடுப்பும் அமைந்திருக்கிறது. இதில் சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழுவின் பிரபல்யம் பற்றி மேலே பார்த்தோம். அரசின் இராணுவ முன்னெடுப்பு பற்றி மக்களின் கருத்தையும் பார்த்தால்‚ இலங்கை இனப்பிரச்சிரன தொடர்பில் தென் இலங்கை சிங்கள மக்களின் தற்போதைய நிலைப்பாடு பற்றி ஒரு தெளிவு கிடைக்கும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போரை வழி நடத்தும் விதம் தொடர்பில்‚ தென் இலங்கை சிங்கள மக்களில் 91.4 சதவீதமானவர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். மேலும்‚ 92.2 சதவீதமான தென் இலங்கை சிங்கள மக்கள் அரசினது இராணுவம் தற்போது பலமான நிலையில் உள்ளதாக மதிப்பிடுகின்றனர். இந்த கருத்து கடந்த வருடம் கார்திகையில் 88 சதவீதமானவர்களிடமே காணப்பட்டது.

இந்த வகையில் மூன்று தசாப்தத்திற்கும் மேலாக தொடர்கினற இனப்பிரச்சினைக்கு தீர்வு விடயம் தொடர்பில் அரசு தெரிவிக்கின்ற வழி முறைகள் இரண்டில் போர் ரீதியான அனுகுமுறையே தென் இலங்கையில் பிரபல்யம் பெற்றுள்ளதுடன் வரவேற்கப்படுவதுமாக அமைந்திருப்பது துரதிஷ்டவசமானது.

கடந்த வருட நடுப்பகுதியளவில்‚ காப்பி விடுதியில் சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழு (ஊயகé ன’ யுீசுஊ) எனும் கட்டுரையில் ஆய்வாளர்களான பிரதீப் பீரிஸ் மற்றும் அனுபமர ரனவன ஆகியோர் குறிப்பிட்டது போன்று ‘இராணுவ முன்னெடுப்பு விடயத்தில் ஊடகங்கள் முன்னெடுக்கும் பிரசாரங்கள் சிங்களவர்கள் மத்தியில் அரசியல் தீர்வு காண்பது தொடர்பில் உள்ள ஆர்வத்தை குறைக்கும். இராணுவ வெற்றி பற்றி ஆளுங்கட்சியினரின் மிகைப்படுத்தப்பட்ட பிரசாரத்தால் சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழு முன்வைக்கும் தீர்வு தொடர்பில் சிங்களவர்கள் மத்தியில் முக்கியத்துவம் குறையும்’ போன்ற கருத்துகள் மெய்ப்பிக்கப்பட்டுள்ளதை சமாதான நம்பிக்கைச் சுட்டி ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துவதாக அமைகின்றன.

ஆனால்‚ அண்மைய முகமாலை கள நிலமை‚ மற்றும் மணலாறு முகாம் பகுதியில் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட விமானத் தாக்குதல் என்பன அரசு பிரசாரம் மேற்கொண்டு வரும் இராணுவ வெற்றியை கேள்விக் குறியாக்கியள்ளது எனலாம்.

மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி
02.05.2008