සිංහල, Colombo, Democracy, Education

முட்டாள்தனமான பதில்

rajesh-uni-121207.jpg
அடிப்படை வசதிகளைக் கேட்டு போராட்டம் நடத்திய மாணவர்களை இலங்கை அரசின் பொலிஸார் கடந்த 10ஆம் திகதி (டிசம்பர்) காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி‚ ஒரு பிக்கு உட்பட பல மாணவத் தலைவர்களை கூட்டில் அடைத்துள்ளமை தெரிந்ததே. இவ்வளவையும் செய்துவிட்டு இதற்கும் அரசுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டேர புள்ளே தெரிவித்திருக்கிறார்.

இந்த மாணவர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தவில்லை. தமக்குப் போதிக்க விரிவுரையாளர்கள் இல்லை‚ விரிவுரை மண்டபங்கள் இல்லை‚ வதிவிட வசதிகள் இல்லை‚ மலசலகூட – சுகாதார வசதிகள் இல்லை‚ குடிதண்ணீர் வசதிகள் இல்லை என்ற தமது கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான போராட்டத்தை நடத்தினர். இதற்கு முன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக சில வாரங்கள் தொடர்ச்சியான அடையாள உண்ணர நோன்புப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில்‚ இங்கு வைத்தும் பொலிஸாரினால் இவர்கள் பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டனர். அச்சமயம் 4 மாணவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்தே டிசம்பர் 10ஆம் திகதி பெரும் ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எந்த எதிர்ப்பு வந்தாலும் போராட்டம் தொடரும் என மாணவர்கள் ஏலவே அறிவித்தபடி பேரணியாகத் தலைநகரில் சென்றனர். பிக்கு மாணவர்கள் உட்பட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் லிப்டன் சதுக்கத்தில் பெருமெடுப்பில் கூடினர். இவர்கள் கோஹம் எழுப்பியவாறு பொலிஸாரின் தடுப்பு வேலிகளையும் மீறி போக்குவரத்து நடவடிக்கைகளை ஸ்தம்பிதமடையச் செய்தனர். சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு போக்குவரத்து ஸ்தம்பிதமடைய தண்ணீர் பெளசர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு மாணவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. பல கோணங்களில் இருந்தும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் சரமாரியாக ஏவப்பட்டன. இதனால்‚ பொலிஸாருக்கும் மாணவர்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் தனது பலத்தைப் பிரயோகித்து பிக்கு மாணவர் ஒருவர் உட்பட 10 மாணவர்களைக் கைதுசெய்தனர்.

பல்வேறு தரப்பினர் மீது தனது அடக்குமுறைகளை பிரயோகித்து வந்த இந்த மஹிந்த அரசு தற்போது மாணவர்கள் மீதும் கை வைத்துள்ளது. அடிப்படை உரிமைகளைக்கேட்டு போராட்டம் நடத்திய இந்த மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக நடந்துவிட்டு இப்போது அரசுக்கும் இதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ஜெயராஜ் தெரிவிக்கின்றார். நாடாளுமன்றில் இது தொடர்பாக காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போதே ஜெயராஜ் தெரிவித்திருக்கிறார்.

“அரசு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாணவர்களை அடித்துத் துன்புறுத்தும்படியேர அல்லது கைதுசெய்து சிறையில் அடைக்கும்படியேர கூறவில்லை. மாணவர்கள் கைதுசெய்யப்பட்டதற்கும் அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பொலிஸாரின் உத்தரவை மீறி‚ தடைகளைத் தள்ளி‚ பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல்களை நடத்த முயன்றமையாலேயே பொலிஸார் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.” – என்று அமைச்சர் ஜெயராஜ் தெரிவித்திருந்தார்.

பொலிஸார்‚ இராணுவத்தினரின் அத்துமீறலான – காட்டுமிராண்டித்தனமான – நடவடிக்கைகள் யாவையும் இவ்வாறு முட்டாள்தனமாகக் கூறி தப்பித்துக்கொள்ள முடியாது. கட்டாயம் இவற்றுக்கு அரசு பதில் கூறவே வேண்டும். இந்தப் படைகள் மேற்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் அரசே பொறுப்பு. இவ்வாறிருக்கையில் அமைச்சரின் இந்தக் கூற்று முட்டாள்தனமாது என்றே கூறமுடியும்.

S.Rajaseger