தமிழ், Human Rights, Human Security, Peace and reconciliation

பாதுகாப்பும் விட்டுக்கொடுப்பும்

கொழும்பை அண்டிய பிரதான நகரம் ஒன்றில் வார நாள் ஒன்றின் பரபரப்பான காலைப் பொழுது. பெரும்பான்மை சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர். மேலிந்த கரிய உருவம். அழுக்கான உடை. வெறும் கால். குழம்பிய தலை. கைகளில் இரண்டு பெரிய பைகள். ஒரு வாய் மூடி கட்டப்படாத உரப்பை நிறைய அகத்திக் கீரை. ஒரு ஔி ஊடுபுக விடும் பொலிதீன் பை நிறைய அகத்திப் பூ. புறக்கோட்டை நோக்கிப் போகின்ற பேரூந்தில் ஏற மிகத் தீவிரமாக முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 10‚ 12 பேரூந்துகள் அவரை ஏற்றிக் கொள்ள மறுத்தது. பாவம் அந்த அப்பாவி கீரை வியாபாரி. அன்று அவனது வியாபாரம் என்னானது? அன்றைக்கு அந்தக் கீரையையும் பூவையும் விற்க முடியாவிட்டால் அவன் என்ன செய்வான். இந்தப் பேரூந்து தரிப்பிடத்தில் நின்ற மூன்று பேர் தங்களுக்குள் ‘இப்போது அனேகமான பேரூந்துகளில் பொதிகளை ஏற்றிச் செல்ல அனுபதிப்பதில்லை. கொழுப்புக்குள் மட்டுமல்ல தூர இடங்களுக்கான பேரூந்துகளிலும் இதே நிலைமைதான்’ என்று கதைத்துக் கொண்டனர்.

இந்த அப்பாவி வியாபாரிக்கு நடந்ததும்‚ அந்த மூன்று பேர் கதைத்துக் கொண்டதும் அப்படியே தென் இலங்கை முழுவதும் நடக்காவிட்டாலும்‚ இந்த நிலைமை அனேகமாக தென் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் சிறிதளவிளாவது இருக்கிறது என்பதுடன் இது வியாபித்துக் கொண்டு போகிறது என்பதுதான் யதார்த்தம்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கருத்துக் கணிப்புப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால்‚ 2007 நவம்பர் 12ம் திகதி முதல் 26ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடாத்தப்பட்ட‚ 27வது “சமாதான நம்பிக்கைச் சுட்டி” (பீ.சீ.ஐ) ஆய்வின் முடிவுகளில்‚ தென் இலங்கை சிங்கள மக்களில் 87.3 சதவீதமானவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷ தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற போர் நடவடிக்கைகள் தொடர்பாக தாம் திருப்தி அடைவதாக தெரிவித்திருந்தனர். மெலும்‚ ‘கடந்த வருட நிலைமையுடன் ஒப்பிடும் போது நாட்டின் பாதுகாப்பு நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளதர அல்லது மோசமடைந்துள்ளதா?’ என்று கேட்டதற்கு 66 சதவீதமான சிங்கள மக்கள் பாதுகாப்பு நிலைமை ‘முன்னேற்றமடைந்துள்ளது’ என்று தெரிவித்திருந்தனர்.

சோஷல் இன்டிகேட்டரின் 2007 பெப்ரவரி மாத சமாதான நம்பிக்கைச் சுட்டி ஆய்வு முடிவுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுப் பிரச்சினைகளை கையாள்வதற்காக‚ முக்கிய அர்ப்பணிப்பாக தற்போதைய வாழ்க்கைச் செலவினை தாம் தாங்கிக்கொள்வதாக 57 சதவீதமான சிங்கள மக்கள் தெரிவித்திருந்தனர். ஜுன் மாதம் 44 சதவீதமான சிங்கள மக்கள் இக்கருத்தைக் கொண்டிருந்தனர். 2007 நவம்பர் மாத சமாதான நம்பிக்கைச் சுட்டி முடிவுகளில் ‘அரசாங்கம் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு எதிராக முனைந்து போரிடுவதால் தற்போதைய வாழ்க்கைச் செலவினை தாங்கிக்கொள்வதாக 60.5 சதவீதமான சிங்கள மக்கள் தெரிவித்திருந்தனர்.

கடந்த வருட பெப்ரவரி‚ ஜுன் மாத நிலைமையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகரித்தது. குறிப்பாக எரிபொருள்‚ போக்குவரத்துக் கட்டணம்‚ சமையல் எரிவாயு விலை போன்றவற்றைக் குறிப்பிடலாம். பயங்கரவாதத்தை எதிர்த்து தாம் மேற்கொள்ளும் இராணுவ முன்னெடுப்புகளின் செலவும்‚ உலகச் சந்தையில் எண்ணெய் விலையேற்றமுமே அரசதரப்பினால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக முன்வைக்கப்பட்டுவந்தன.

நவம்பர் மாத சமாதான நம்பிக்கைச் சுட்டியில் 53.5 சதவீதமான சிங்கள மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு‚ பயங்கரவாதத்தை எதிர்த்து அரசு மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கை காரணம் என்றும் 16 சதவீதமான சிங்கள மக்கள் உலகச் சந்தையில் எண்ணெய் விலையேற்றம் காரணம் என்றும் தெரிவித்திருந்தனர். இது தவிர 15.7 சதவீதமான சிங்கள மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு காரணம் தற்போதைய அரசாங்கத்தின் மோசமான பொருளாதார முகாமைத்துவம் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஜுன்‚ பெப்ரவரி மாதங்களில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு இராணுவ நடவடிக்கையே காரணம் என்று தெரிவித்த சிங்கள மக்களின் சதவீதம் முறையே 54‚ 51 ஆகும். எண்ணெய் விலையேற்றம் என்று தெரிவித்தவர்கள் முறையே 51‚ 11 சதவீதம் ஆகும்.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலான கால இடைவெளியில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் தென் இலங்கையின் இராணுவ முன்னெடுப்புகளுக்கு ஆதரவு ஆகிய விடயங்கயள் தொடர்பாக கவனித்தால்‚ வாழ்க்கைச் செலவானது அதிகரித்தவண்ணம் இருந்தாலும் தென் இலங்கையின் பெரும்பான்மையான சிங்கள மக்கள் அரசின் இராணுவ முன்னெடுப்புகளுக்கு இன்னும் ஆதரவு தெரிவிப்பவர்களாகவே இருப்பார்கள்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் மெதுமெதுவாக செயல் இழக்க தொடங்கி முலுமையான யுத்த முன்னெடுப்பு நிலைமை ஏற்படும் வரை‚ அவ்வப்போது யுத்தத்தில் இறந்த சிப்பாய்களின் சடலங்கள் தென்பகுதிக்கு வருவது தவிர‚ வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பதே யுத்தத்தின் பாதகமான ஒரு விளைவாக தென் இலங்கை சிங்கள சமூகத்தினால் நேரடியாக உணரப்பட்ட விடயம். அரசு தரும் விளக்கங்களின் படி தற்போது படையினருக்கு ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவு. முக்கியமாக படைத்தரப்பில் உயிரிழப்பு மிகவும் குறைவானதாகவே தெரிவிக்கப்படுகிறது. எனவே அரசு தெரிவிக்கிற புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ‘படையினர் உயிரிழப்பு’ என்னும் ரீதியில் தென் இலங்கை சிங்கள மக்களுக்கு பெரிய அர்ப்பணிப்புகள் ஏதும் இல்லை.

ஆனால்‚ வடக்கு கிழக்கில் அரசு யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைத் தாங்கிக் கொள்வதாக தெரிவித்த தென் இலங்கை சிங்கள மக்களுக்கு இன்னுமொரு துயரத்தையும் தாங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அது தென் இலங்கை குண்டு வெடிப்புகள். சமீப காலமாக தென் இலங்கையில் பல குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றன. கடந்த 6ம் திகதி பாராளுமன்றத்தில் பிரதம மந்திரி ரட்ணசிறி விக்கிரமநாயக்க கடந்த ஒரு மாதத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலினால் 78 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் 110 பொது மக்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்தார். இருந்தபோதும் தென் இலங்கைப் பாதுகாப்பிற்காக வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரை எக்காரணத்திற்காகவும் தெற்கிற்கு கொண்டுவர மாட்டோம் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அண்மையில் தெரிவித்தார். தென் இலங்கையில் நடக்கும் தாக்குதல்களை தடுக்க நாடு முழுவதும் கிராமிய மட்டங்களில் 15000 சிவில் பாதுகாப்பு குழுக்களை ஒரு மாதத்திற்குள் அமைக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் குழு எவ்வளவு திறமையாக செயற்படும் என்பது கேள்விக்குறியது.

எகனொமிஸ்ட சஞ்சிகையினால் ‘பாதுகாப்பு குரு’ என்று வர்ணிக்கப்பட்ட ‘புருஸ் ஸனயர்’ (டீசரஉந ளுஉாநெநைச) எனும் பாதுகாப்பு தொடர்பான நிபுணர் தனது ‘பாதுகாப்பு உளவியல்’ எனும் கட்டுரையில் ‘பாதுகாப்பு என்பது விட்டுக்கொடுப்பு’ (வசயனந – ழகக) என்று குறிப்பிடுகிறார். மேலும்‚ பாதுகாப்பு என்பதற்கு பணம்‚ காலம்‚ சிரமம்‚ வசதி‚ சுதந்திரம்‚ இயலுமை‚ செளகரியம்‚ போன்ற பெறுமதிகள் உண்டு என்பதையும் நினைவூட்டுகிறார்.

இந்த விளக்கத்துடன் இலங்கை நிலைமையை பார்த்தால்‚ வடபகுதி இராணுவ முன்னெடுப்பு என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தென்பகுதியின் பாதுபாப்பு சிறிது விட்டுக்கொடுக்கப்படுகிறது என்று கூறலாம். 2002ல் ஐக்கிய தேசிய கட்சி அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமானது விடுதலைப் புலிகளை பலப்படுத்தும் ஒரு செயற்பாடு என்றும் இதன் மூலம் நாடு பிழவு பட வாய்ப்பு உண்டு என்றும் மக்கள் விடுதலை முன்னணி‚ ஜாதிக ஹெல உருமய அடங்களாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரால் விளக்கம் கொடுக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே இராணுவ முன்னெடுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இன்னொரு வகையில் சொன்னால்‚ தேசிய பாதுபாப்பை கருத்தில் கொண்டே இராணுவ முன்னெடுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த வகையில் நோக்கினால் தேசிய பாதுபாப்பிற்காக தென்பகுதியின் தனியாள் பாதுபாப்பு சிறிது விட்டுக்கொடுக்கப்படுகிறது என்று கூறலாம்.

இராணுவ முன்னெடுப்பிற்காக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைத் தாங்கிக்கொள்ளும் அர்ப்பணிப்பை செய்ய முன்வந்த தென் இலங்கை சிங்கள மக்கள்‚ தங்களது தனிநபர் பாதுபாப்பைபிலும் அர்ப்பணிப்பை செய்வார்களா?

இலங்கை இனப் பிரச்சினையின் இன்றைய நிலைப்பாட்டினை எடுத்து நோக்கும் போது‚ பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாயின் இருதரப்பும் மற்றும் அத்தரப்பு சார்ந்த மக்களும் ‘அடைதல்’‚ ‘இழத்தல்’ இரண்டுக்கும் முகம் கொடுக்க வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு காணப்படக் கூடிய வழிகளில் ‘சமாதான பேச்சுவார்த்தை’ மற்றும் ‘யுத்தம்’ ஆகிய இரண்டு வழிமுறைகளும் இருதரப்பினாலும் மற்றும் அத்தரப்பு சார்ந்த மக்களாளும் கடந்த 25‚ 30 வருட காலமாக அனுபவிக்கப்பட்டு வந்துள்ளன.

இறுதியாக 2002 யுத்த நிறுத்த ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளில் இருதரப்பிற்கும் ‘அடைதல்’‚ ‘இழத்தல்’ ஆகிய இரண்டும் வெவ்வேறு விகிதங்களில் இருந்தன. அதேபோல‚ இப்போது நடக்கும் யுத்த முன்னெடுப்பிலும் இருதரப்பிற்கும் ‘அடைதல்’‚ ‘இழத்தல்’ ஆகிய இரண்டும் வெவ்வேறு விகிதங்களில் இருக்கிறது. இரண்டு முறைகளிலும் அடைதல் கொண்டாடப்படுகின்றமை பெரிய விடயமல்ல. இழத்தல் என்பகும் வெற்றியை தீர்மானிக்கும் காரணி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இராணுவ முன்னெடுப்பை அல்லது யுத்தத்தை ஆதரிக்கும் தென் இலங்கை சிங்கள மக்கள்‚ யுத்த முறையினால் ஏற்படும் இழப்புகளை எந்தளவிற்கு தாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்?

மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி.
29.02.2008