සිංහල

பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு பொதுமக்களுக்கா‚ அரசியல்வாதிகளுக்கா?

rajesh-photo-2907.jpg
ஒரு நாட்டின் பாதுகாப்புப் படையினர் அந்த நாட்டில் உள்ள மக்களின் பாதுகாப்புக்காகவே கடமையில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். இந்த முறை வெளிநாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றபோதிலும் இந்த நாட்டில் – இலங்கையில் – பொதுமக்கள் காணாமல்போவதைப் போல் அதுவும் காணாமல்போயிருக்கிறது.

பாதுகாப்புப் படையினர் முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் பாதுகாவலர்களாகவே இருக்கின்றனர். பொதுமக்களேர எந்தவித பாதுகாப்பும் இன்றி இன்னல்களுக்குள் சிக்குண்டு மடிந்து வருகின்றனர்.

அரசு – விடுதலைப்புலிகள் இடையே இடம்பெற்றுவரும் மோதல்களில் இதனைக் காணக்கூடியதாக இருக்கிறது. இருதரப்பினரின் சரமாரியான பதில் எதிர்த்தாக்குதல்களில் எதுவுமறியாத அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர்.

அரச படைகளின் அகோரமான விமானத் தாக்குதல்களில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்படுகின்றமை குறைந்தளவே. மாறாக அப்பாவி மக்களே பெருமளவில் உயிரிழக்கின்றனர். மாவீரர் தினமான நவம்பர் 27ஆம் திகதி இலங்கை விமானப் படையின் விமானங்கள் ‘புலிகளின் குரல்’ வானொலி நிலையம் மீது தாக்குதல்களை நடத்தியதில் பணியாளர் ஐவர் பொதுமக்கள் 5 பேர் பலியாகினர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. புிரபாகரனின் மாவீரர்தின உரையைக் கேட்க அவ்விடத்தில் – வானொலி நிலையப் பகுதியில் – மக்கள் குழுமி்யிருந்த வேளையிலேயே விமானப் படையின் விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தினத்திலே முல்லைத்தீவு மாவட்டம்‚ துணுக்காய் ஐயன்கன் குளம் பகுதியில் இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையினரால் நடத்தப்பட்ட கிளைமோர் குண்டுத்தாக்குதலில் 9 மாணர்கள் உட்பட 11 பேர் பலியானார்கள். இவர்கள் என்ன விடுதலைப் புலிகளர இவர்கள்? பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டியவர்கள் அவர்களையே கொள்வதா?

இதேவேளை –

கொழும்பு நுகேகொடவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் பலியாகியிருக்கின்றனர். இதில் ஏழு பெண்கள் அடங்குகின்றனர். இவர்கள் யாருக்கு என்ன துரோகம் செய்தனர்?

அமைதியாக இருந்த இந்த நாட்டை அலை கடலாக பொங்கவைத்த மஹிந்த கம்பனி மட்டும் பாதுகாப்பாக சென்றுவருகிறது. எங்காவது பயணிக்க வேண்டுமானால் அவர்கள் செல்லும் பாதைகள் தவிர ஏனைய அனைத்து பாதைகளும் மூடப்பட்டு சோதனை நடத்தப்பட்டு‚ பொதுமக்கள் அகற்றப்பட்ட பின்னரே சொகுசாக புறப்படுகின்றனர்.

அரசியல்வாதிகளுக்கு இவ்வாறான பாதுகாப்பு என்றால் மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது?

“நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்த நேரத்திலும் புலிகள் தாக்குதல் நடத்தலாம்‚ உஷாராக இருங்கள்” – இப்படி எமக்கு அறிவுரை வழங்கியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட ஆலோசகரும்‚ சகோதரரும்‚ நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ.

* இந்த நிலைமைக்கு யார் காரணம்?
* இவ்வாறு கூறிவிட்டு நீங்கள் பாதுகாப்பாக செல்லலாம். மக்களின் நிலை?

பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு அரசியல்வாதிகளுக்கா‚ பொதுமக்களுக்கா?

S.Rajasegar