සිංහල, Colombo, Democracy, Media

நெருக்கடிக்குள் ஊடகத்துறை

உண்மைகளை அப்படியே அப்பட்டமாக பகிரங்கப்படுத்தும் அனைவரும் தற்போது தேசத்துரோகிகள்‚ எதிரிகள் என்றே அரசால் செல்லமாக அழைக்கப்படுகின்றனர். இதில் முதல் இடத்தை வகிப்பவர்கள் ஊடகவியலாளர்களே. அரசின் அனைத்து அட்டூழியங்களையும் பொதுமக்களுக்கு அறியத்தரும் இந்த ஊடகவியலாளர்களுக்கே இந்த நிலை.

அத்துடன்‚ ஊடகவியலாளர்கள் தொடர்பான அரசியல்வாதிகளின் பேச்சுகளும் இழிவுபடுத்துவனவாக உள்ளன. அதுமட்டுமல்ல திறந்த வெளிகளில் ஊடகவியலாளர்களைத் தாக்குதல் போன்றனவும் இடம்பெறுகின்றன.

அண்மையில் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இதுபோன்ற சம்பவமொன்றே இடம்பெற்றுள்ளது. அமைச்சரொருவர் தனது உரையை ஒலிபரப்பாததனால் செய்திப் பிரிவின் பணிப்பாளரை தாக்கியிருக்கிறார். இதனையடுத்து அங்கு கூடிய ஊடகவியலாளர்கள் குறித்த அமைச்சரான மேர்வி்ன் சில்வாவையும்‚ அவரின் பாதுகாவலர்களையும் புரட்டி எடுத்திருக்கி்ன்றனர்.

தற்போது‚ ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் பெரும் திரளான ஊடகவியலாளர்கள் எவ்வாறு வந்தனர்? அமைச்சரைத் தாக்கியவர்கள் யார்? கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் என்ன செய்துகொண்டிருந்தனர்? என்ற கேள்விகள் எல்லாம் எழத் தொடங்கி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 10 ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்படவிருக்கின்றனர் எனவும் அறியமுடிகிறது.

இருப்பினும்‚ செய்திப் பிரிவின் பணிப்பாளரைத் தாக்கிய அமைச்சர் மேர்வின் சில்வாவின் பாதுகாவலர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. அமைச்சர் மேர்வின் சில்வர ஊடகத்துறையை அவமதிப்பது முதற் தடவையல்ல. இதற்கு முதல் பல தடவைகள் ஊடகத்தை அவமதித்துள்ளார். ஆனால்‚ இவருக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுத்த பாடில்லை. ஏன் இவர் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் தோழரோ?

மேலும்‚ ஊடகவியலாளர்களை விடுதலைப் புலிகளுடன் இணைத்து பேசுவதும் வழக்கமாகிவிட்டது. நாட்டின் அமைச்சர்களும் ஏன் அரச தலைவரும் கூட ஊடகவியலாளர்களை அவதூறாகப் பேசியுள்ளார்.

சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளில் ஊழல் காணப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானதன் பின்னர் சுகாதார மற்றும் போசாக்கு நலத்துறை அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவின் விமர்சனத்துக்கும் ஊடகத்துறை உள்ளானது. ரேபிஸ் நோயுடன் உள்ள நாய்கள் என்றும் – தடுப்பூசி போடவேண்டும் என்றும் ஊடகவியலாளர்களை விமர்சனம் செய்திருந்தார் நிமல் சிரிபால டி சில்வா.

இவ்வாறு ஊடகத்துறையை அவதூறாகப் பேசிய அமைச்சர்கள்‚ எம். பிக்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது.

நெருக்கடிக்குள் சிக்குண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் நிம்மதியாக‚ சுதந்திரமாக‚ தடையின்றி பணியாற்றுவது எப்போது?

பி. மனோஜ்