සිංහල

அசிங்கமான அரசியல்வாதிகளினால் அடிமேல் அடிவாங்கும் அப்பாவிகள்

fire.gif
ஆழிப்பேரலை ஏற்பட்டு 3 வருடங்கள் கழிந்தும் ஆழிப்பேரலை ஏற்பட்ட சில நாடுகளில் இன்னும் மக்கள் இன்னல்கள் அனுபவித்துக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சில நாடுகள் என்று குறிப்பிடுகையில் அதில் முக்கிய பங்கு வகிப்பது இலங்கையே.
ஆழிப்பேரலையின் பின்னர் இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டு உதவிகளைக் கொண்டு நாட்டை ஓரளவுக்கு சிங்கப்பூராகவோ‚ மலேசியாகவேர மாற்றியிருக்க முடியும் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
இருப்பினும்‚ அவ்வாறு ஆகாமல் எந்தவித பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல்‚ பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகள் கூட பூர்த்திசெய்யாமல் வெளிநாட்டு உதவிகளை அப்படியே – முழுவதுமாக – விழுங்கியது யாரோ?
இந்த ஆழிப்பேரலை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இப்போதும் – 3 வருடங்கள் கழித்தும் – முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த முகாம்களில் அவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்றே கூறவேண்டும். பலகையால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடுகள் ’சுனாமி வீடுகள்’ என்றே அழைக்கப்படுகின்றன. இந்த வீடுகள் எந்தவித பாதுகாப்பும் அற்றவை. கூடிய விரைவில் தீ பரவக் கூடியது.
இவ்வாறான (தீ) ஒரு நிலை கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி ஆழிப்பேரலை கூட்டு வீட்டுத்தொகுதியொன்றில் ஏற்பட்டுள்ளது. மொறடுவை நகரசபைக்கு உட்பட்ட பொருபனை அனுர மாவத்தை எனும் பகுதியில் அமைந்திருந்த ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்காலிக வீடுகளில் தீ ஏற்பட்டது. 500 பேர் வசிக்கின்ற 124 வீடுகள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன. இதில்‚ 40 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ள போதிலும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆழிப்பேரலையின்போது மீட்டெடுக்கப்பட்ட சில முக்கிய ஆவணங்களும் தீ விபத்தினால் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு தொடர்ந்து இன்னல்கள் ஏற்பட்ட வண்ணமேயுள்ளன. ஆழிப்பேரலையினால் அவர்களுக்கு ஏற்பட்ட உருத்தல் மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் இதேபோன்ற வீடுகளா? இதேபோன்று மேலும் விபத்துக்கள் ஏற்படாதா? இவர்களுக்கு சுபீட்சமான வாழ்க்கை இல்லையா? போன்ற கேள்விகள் எழுகின்றன.
ஆழிப்பேரலை ஏற்பட்ட பின் கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு உதவிகளைக் கொண்டே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உருப்படியான‚ முழுமையான‚ தாக்குப்பிடிக்கக்கூடிய வீடுகளைக் கட்டிக்கொடுத்திருக்கலாமே? மொறடுவை போன்று இன்னும் ஏராளமான கரைப் பிரதேசங்களில் இவ்வாறான தற்காலிக வீடுகள் இருக்கின்றன. இவையும் எப்போது தீப்பிடிக்கப்போகின்றனவேர தெரியவில்லை. இதற்கு அரசு என்ன செய்யப்போகிறது.
அமுக்கி வைத்திருக்கும் பணத்தை ஊழல் அரசியல்வாதிகள் வெளியிலெடுப்பார்களா? அது எப்படி எடுப்பது. மாட்டிக்கொண்டு விடுவார்களே. ஆகவே‚ ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டு அநாதரவாகக் கிடக்கும் மக்களுக்கு எவ்வாறு உதவுவது. மீண்டும் ஒரு ஆழிப்பேரலை ஏற்படவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவோமா? ஏன் இவன் இப்படி கூறுகிறான் என்று பார்க்கிறீர்களா? அப்போதுதானே மீண்டும் வெளிநாட்டு உதவிகள் வந்து சேரும். இவற்றையும் ஊழல்வாதிகள் சுருட்டிவிட்டார்களென்றால். என்ன செய்வது‚ எல்லர பக்கமும் இறுக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள்தான். இவர்களை யார் காப்பாற்றுவது……………..
அரச தலைவர் ராஜபக்ஷவே ஆழிப்பேரலைக்காக வழங்கப்பட்ட பணத்தினை மோசடி செய்துள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்க முன் ஹம்பாந்தோட்டையில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை செய்து கொடுக்குமாறு வழங்கப்பட்ட நிதியை ’ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ எனும் பெயரில் கணக்கொன்றின் ஊடாக வைப்பிலிடப்பட்டிருந்தது. இருப்பினும்‚ அந்தப் பணத்துக்கு என்ன நேர்ந்தது என்றே தெரியவில்லை. மஹி்ந்த ராஜபக்ஷ மோசடி செய்துவிட்டார் என்று எதிர்க்கட்சித் தரப்பால் குற்றம்சாட்டப்பட்டது.
இருந்தபோதிலும்‚ இது தொடர்பான விசாரணைகளை லஞ்ச ஊழல் ஆணைக்குழு மேற்கொண்டது. இருப்பினும்‚ மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் அது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.
நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என்று சட்டம் இருப்பதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாமல் போனது. கோடிக்கணக்கான பணத்துக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.
இருப்பினும்‚ தற்போது ஜனாதிபதியாக இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ இப்போதாவது அப்போது ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவலாமே! உதவுவாரா?