සිංහල, Colombo, Democracy, Peace and reconciliation

தமிழ் நாட்டு தூண்டல் – மத்திய அரசின் துலங்கள்

இந்தியா‚ பூகோள பரப்பளவில் மற்றும் சனத்தொகையில் இலங்கையை விடவும் கிட்டத்தட்ட ஐம்பது மடங்கு பெரியது. இலங்கை அவ்வளவு சிறியதாக இருந்தாலும்‚ மிக முக்கியமாக‚ அதன் பூகோள அமைவிடம் காரணமாக இந்தியாவினால் புறந்தள்ள முடியாத விடயமாக உள்ளது. அடுத்தபடியாக‚ இந்தியாவின் தென்பகுதியான தமிழ் நாட்டிற்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையிலான இன மத மொழி ரீதியிலான உணர்ச்சி வசமான தொடர்புகள்‚ கலை‚ கலாச்சாரம் சார்ந்த ஒற்றுமைகள் என்பன முக்கியத்துவம் பெருகின்றன. இதன் அடிப்படையில் அரசியல் ரீதியான இலங்கை இந்திய உறவு காலங்காலமாக பல்வேறு நிலைகளில் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

தற்போது இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் இந்திய காங்கிரஸ் கட்சியும் இலங்யையின் ஆட்சிப் பொறுப்பில் ஸ்ரீலங்கர சுதந்திரக் கட்சி்யும் உள்ளது. முன்னைய காலங்களில் ஒப்பீட்டளவில்‚ இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில்‚ ஐக்கிய தேசிய கட்சியை விட‚ ஸ்ரீலங்கர சுதந்திரக் கட்சி்யின் ஆட்சியில் இலங்கை இருந்த காலங்களில் இலங்கை இந்திய உறவு சற்று சிறப்பாக இருந்தது என்று கூறலாம். அதற்கு கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வை விட கட்சித் தலைவர்களுக்கு இடையில் இருந்த தனிப்பட்ட நட்புறவு செலுத்திய செல்வாக்கு அதிகம். ஆனால் அண்மைக் காலங்களில் கட்சி வேறுபாடு கடந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவின் முக்கியத்துவம் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

பொதுவாக. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு சிறப்பாக இருப்பதை அரசியல் தலைவர்கள் பரஸ்பர விஜயங்களை மேற்கொள்வதன் மூலம் வெளிக்காட்டும்‚ அரசியல் இராஜதந்திர வழக்கம் நடைமுறையில் உள்ளது. 2005 நவம்பரில் பதவி ஏற்றதன் பின்னர் இன்று வரை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு தடவைகள் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். ஆனால்‚ 1987ல் அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் இலங்கை விஜயத்தி்ன் பின்னர் இன்று வரை வேறு இந்திய பிரதமர் எவரும் இலங்கைக்கு அரசியல் ராஜதந்திர ரீதியிலான விஜயம் மேற்கொள்ளவில்லை. இந்திய பிரதமர்களாக பதவிவகித்த நரசிம்மராவ் மற்றும் குஜ்ரால் ஆகியோர் சார்க் (ளுயுயுசுஊ) மகாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கை வந்து சென்றிருந்தாலும்‚ அது ராஜதந்திர பெறுமதி வாய்ந்த விஜயம் அல்ல.

இந்த பின்னணியில்‚ வருகிர பெப்ரவரி மாதம் 4ம் திகதி‚ இலங்கையின் 60வது சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக இந்தியப் பிரதமர் கலாநிதி. மன்மோகன் சிங் கலந்து கொள்வார்‚ என்று இலங்கை தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டு ஒரு சில நாட்களின் பின்னர்‚ சுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ள மாட்டார் என்று இந்தியத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளாமைக்கு அந்த நாட்களில் எற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் இறுக்கமாக இருக்கின்றமை காரணமாக கூறப்பட்டது.

அதே போன்று கடந்த வருடம் செப்டெம்பர் மாத முதற் பகுதியில்‚ இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷவின் செயலாளர் லலித் வீரதுங்க‚ பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபே ராஜபக்கஷ மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்கஷ ஆகியோர் புதுடில்லிக்கு விஜயம் செய்து‚ இந்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரின் செயலாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர்‚ இந்தியாவும் இலங்கையும் பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் இணைந்து செயற்பட பாதுகாப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டதாக இலங்கை தரப்பில் ஜனாதிபதி காரியாலயம் செய்தி வெளியிட்டது. பின்னர் அவ்வாறு எந்த இணக்கப்பாட்டிற்கும் வரவில்லை என இந்தியத் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் இலங்கை தரப்பில் மன்னிப்பு கோரல் கூட வெளியாகியது.

இந்த நிகழ்வுகளின் பின்னனியில் உள்ள அரசியல் நிலவரம் பற்றி சற்று கவனம் செலுத்துவது இந்த சமயத்தில் பொருத்தமாக இருக்கும்.

2006ம் வருட மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் “தங்களது ஆதரவுக்குரலினை வழங்கிவரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளும் நாங்கள்‚ அவர்களது முயற்சிகளை தொடர்ந்து வழங்கி எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவும் படியும் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்”. என்று வேண்டியிருந்ததை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்திக் கொண்டு மேலே செல்வோம்.

2006 ம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கை அரச தரப்பு வடக்கு கிழக்கில் தனது இராணுவ முன்னெடுப்புகளை தீவிரப்படுத்திய பின்னர் இலங்கைத் தமிழர் சார்பான உணர்வலை தமிழ் நாட்டில் சிறிது சிறிதாக தீவிரமடைய தொடங்கியது. இதில் குறிப்பிடத்தக்க சில உதாரணங்களை பார்ப்போம்.

தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்‚ மருந்து வகைகள்‚ மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என்பவற்றை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக யாழ் குடாநாட்டு மக்களுக்கு அனுப்புவதற்கு இந்திய மத்திய அரசன் அனுமதி கிடைக்காத நிலையில்‚ தாம் நேரடியாக உணவுப் பொருட்களுடன் படகு மூலம் கடல் வழியே யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட தயாரான‚ தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் பொலிசாரால் தடுக்கப்பட்டார். பின்னர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை நடத்தினார். இதன் போது பல இலங்கைத் தமிழர் சார்பான அமைப்புகள் அவருடன் இணைந்து கொண்டனர்.

இலங்கையின் விமானப் படை விமான குண்டு வீச்சில் விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதன் பின்னர் தமிழ் நாட்டு அரசியலில் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக காட்டப்பட்டு வந்த கரிசனையில் குறிப்பிடும்படியான மாற்றம் ஏற்பட்டது. தமிழ்ச்செல்வனுக்கான அஞ்சலி நிகழ்வுகள் தமிழ் நாடேங்கும் நடத்தப்பட்டன. “இந்திய அரசே‚ இனப்படுகொலை செய்கிற சிங்கள அரசுக்கு ஆயுதங்களை கொடுக்காதே” என்று வலிறுத்தி கையெழுத்து போராட்டம் நடாத்தப்பட்டது.

தமிழ்ச்செல்வனுக்கு அஞ்சலி பேரணி நடாத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதிலும்‚ பழ. நெடுமாறன் தலைமையில்‚ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (ம.தி.மு.க) தலைவர் வைகேர மற்றும் பிரபலங்கள்‚ நூற்றுக்கணக்கான தொண்டர்கள்‚ அனுமதி கிடைக்காததை பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி பேரணியை ஆரம்பிக்க ஓன்று கூடி கூட்டம் நடாத்தியதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் இடப்பட்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர். ராம்தாஸ்‚ திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி‚ விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன்‚ தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்‚ இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் தமிழக செயலாளர் தா. பாண்டியன்‚ இந்திய நாடாளுமன்ற உருப்பினர் கனிமொழி கருணாநிதி‚ திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சு.ப. வீரபாண்டியன்‚ போன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வனின் கொலைக்கு கண்டனமும் அனுதாபமும் தெரிவித்திருந்தனர்.

அஞ்சலி நிகழ்வுகள்‚ அஞ்சலி பேரணி‚ கையெழுத்து போராட்டம்‚ கண்டனம்‚ அனுதாபம் ஆகிய எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற் போல தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு கவிதை ஒன்றின் மூலம் அஞ்சலி செலுத்தியிருந்தார். இவ்வளவுக்கும் விடுதலைப் புலிகள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பாகும்.

இறுதியாக‚ இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார் என்ற செய்தி வெளியாகியதும்‚ பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யக் கூடாது என்பதை வலியுருத்தி தமிழ் நாட்டில் ஊர்வலங்கள் நடாத்தப்பட்டன.

விடுதலைப் புலிகள் விடயத்ததில் எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்ட காங்கிரஸ் கட்சி சார்ந்த இந்திய மத்திய அரசு‚ தமிழ் நாட்டின் இந்த உணர்சி வசப்பட்ட நிலைப்பாட்டுக்கு‚ எப்படி முகம்கொடுக்கப் போகிறது என்ற கேள்வி அப்போதிருந்தே எழுந்திருந்தது.

இந்திய மத்திய அரசு‚ இலங்கைக்கு இராணுவ ரீதியிலான உதவிகளை செய்து வருகின்றமை அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகின. இலங்கை படையினருக்கு பயிற்சிகள் வழங்குதல்‚ புலனாய்வுத் தகவல்கள்‚ தளபாட உதவிகள் என்பன
இந்திய மத்திய அரசினால் வழங்கப்பட்டு வந்தன.

தமிழ் நாட்டின் எதிர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து‚ இலங்கையுடன் தான் கொண்டுள்ள இராணுவ நிலைசார்ந்த உறவை துண்டித்துக்கொள்வது பிராந்திய ரீதியில் தனது ஆதிக்கத்துக்கு நீண்ட கால அடிப்படையில் பாதகமாக அமையும் என்று இந்தியர கணக்கு போட்டிருக்கும். அதே நேரம் தமிழ் நாட்டில் அவ்வப்போது மேலெழுகின்ற இலங்கை தமிழர் சார்பான உணர்வலைகளை அப்படியே புறக்கணிப்பதோ‚ அல்லது கண்டுகொள்ளாமல் விடுவதேர தனது ஆட்சிக்கு சவாலாக அமையும் சாத்தியக் கூறுகள் உள்ளது என்பதையும் புரிந்து வைத்துள்ளது. எனவே இது விடயமாக தமிழ் நாட்டு மக்களை திருப்திப்படுத்தும் விதமாக ஏதேனும் அரசியல் ரீதியான தீர்மானங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத் தேவை மத்திய அரசுக்கு இருந்தது.

பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார்‚ இந்தியாவும் இலங்கையும் பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் இணைந்து செயற்பட பாதுகாப்புக் குழு எதுவும் அமைக்கப்படவில்லை போன்ற அறிவிப்புகள்‚ தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் எழுகின்ற இலங்கை தமிழர் சார்பான உணர்வலைகளை திருத்திப்படுத்துவதற்காக புனையப்பட்ட இராஜதந்திர நகர்வுகள் மட்டுமே கொள்ளவேண்டியுள்ளது.

அதாவது இன்னொரு வகையில் சொல்வதானால்‚ அது மக்களின் உணர்வு ரீதீயான ‘தூண்ட’லுக்கு‚ நடைமுறையில் உணர முடியாத அல்லது உருப்படி இல்லாத அல்லது நேரடி தொடர்பற்ற ‘துலங்கள்’ (வைெயபெடைிடந சநளிழளெந) என்று மட்டுமே கொள்ளவேண்டியுள்ளது.

இலங்கையின் அறிவிப்புகளை இருதடவைகள் இந்தியர மறுத்த நிலையில்‚ சமீபத்தில்‚ இந்திய தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷ வழங்கிய நேர்காணல் ஒன்றில்‚ ‘இலங்கை இனப்பிரச்சனைக்கு மிகச் சிறந்த தீர்வை 1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் முன்வைத்தது’ என்று தெரிவித்திருந்தார். மேலும்‚ தாம் ‘பிரபாகரனை கைது செய்தால்‚ இந்திய அரசாங்கம் அவரை கைது செய்ய விரும்புவதாக கோருமிடத்து அவரை நிச்சயமாக இந்தியாவிடம் கையளிப்போம்’ என்றும் தெரிவித்திருந்தார். இவை கூட வெறுமனே இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக கூறப்பட்ட நடைமுறையில் உணர முடியாத அல்லது உருப்படி இல்லாத அல்லது நேரடி தொடர்பற்ற ‘துலங்கள்’ (வைெயபெடைிடந சநளிழளெந) என்று மட்டுமே கொள்ளவேண்டியுள்ளது.

மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி.

18.01.2008