සිංහල, Colombo, Democracy, Peace and reconciliation

தென் பகுதியை சிவப்பு நிறத்தில்…

பிரித்தானிய ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்று அறுபது வருடங்கள் நிறைவடைந்ததை மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பெப்ரவரி 4ம் திகதி காலிமுகத்திடலில் ஜனாதிபதி தலைமையில் அரசினால் கொண்டாடப்பட்டது. அதே தினம் தேசத்தின் மகுடம் (தாயட கிருல) எனும் கண்காட்சியும் ஆரப்பிக்கப்பட முடிவாகி இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அது 7ம் திகதிக்கு பிற்போடப்பட்டது. கண்காட்சி பிரதேசத்தில் பிரத்தியேக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்காக மேலதிக பாதுபாப்புப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். ஏற்கனகே 1ம் திகதியில் இருந்து 4ம் திகதி வரை கொழும்பு கல்வி வலையத்திற்குள் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளும் முடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் 8ம் திகதி வரை பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்தது. இதற்கு பிரதான காரணம் பாதுகாப்பு.

இந்த கண்காட்சி தொடர்பாக‚ தென் பகுதியின் இரு பிரதான கட்சிகளாகிய ஐக்கிய தேசிய கட்சியும்‚ மக்கள் விடுதலை முன்னணியும் தமது கருத்துகளை வெளியிட்டிருந்தன.

ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உருப்பினர் கயாந்த கருணாதிலக்க ஊடகவியலாளர்கள் மகாநாடு ஒன்றில் பேசும் போது ‘வங்குரோத்து பொருளாதாரத்தை தாங்குவதற்கு வங்கிகளிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளும் அரசு பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்ககும் தனது கடமையினை புறக்கணித்துவிட்டு பொதுமக்களின் பணத்தில் பில்லியன் கணக்கில் தேசத்தின் மகுடம் கண்காட்சிக்காக வீணாக செலவு செய்வதாக குற்றம் சுமத்தினார். மேலும்‚ ‘தென்பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்வதன் மூலம் அரசாங்கத்தை பயமுறுத்தவேர பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தவேர முடியாது என்று அரசதரப்பினர் பெரிதாக பேசுகின்றனர்‚ ஆனால் பயப்படுவது பாமரமக்களே அன்றி அமைச்சர்கள் அல்ல‚ அவர்களுக்கு வானங்களுடன் கூடிய போதிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அமைச்சர்களுக்கும் அவர்களின் குழந்தை குட்டிகளுக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்காக பாதைகள் கூட மூடப்படுகின்றன. அப்பாவி பொதுமக்களுக்குத்தான் எந்த பாதுகாப்பும் இல்லை‚ அதனால் அவர்களே மொத்தமாக பாதிக்கப்படுகின்றனர்’ என்று கருணாதிலக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற குழுத் தலைவரும் பிரசார செயலாளருமான விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் ‘இந்த பெரிய கண்காட்சியானது வீண் செலவையும் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு மேலதிக கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது‚ எனறு தெரிவித்தார். அன்மைய பயங்கரவாத தாக்குதல்களினால் முழு நாடே அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில்‚ வீணான கண்காட்சி காட்டுவதற்கு ஏற்ற காலம் இது அல்ல என்று தெரிவித்தார். மேலும்‚ கண்காட்சி மூலம் பெருந்தொகையான பொதுமக்களை ஓரிடத்தில் ஒன்று திரட்டி புலிப் பயங்கரவாதிகளுக்கு இரையாக்குகிற நிலைமையை உருவாக்க கூடும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு தெரிவித்தார்.

அன்மையில் (6ம் திகதி) பாராளுமன்றத்தில் பேசிய பிரதம மந்திரி ரட்ணசிறி விக்கிரமநாயக்க கடந்த ஒரு மாதத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலினால் 78 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் 110 பொது மக்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்தார். மேலும் 68 படையினர் கொல்லப்பட்டதாகவும் 468 படையினர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார். பிரதம மந்திரி மேலும் பேசுகையில்‚ புலிகளுக்கு ஆதரவாக சிங்களவர்கள் சிலரும் செயற்படுகின்றனர். பாதுகாப்பு தரப்பினரில் சிலரும் புலிகளுக்கு உதவுகின்றனர். இவை தொடர்பாக நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றும் கூறினார்.

இந்த 78 பொது மக்களும் கொல்லப்பட்டது தென் இலங்கையில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புக்களில் என்பதுடன் இது போர் நடைபெறும் பிரதேசத்திற்கு வெளியில் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இவை தவிர மக்களுக்கு நேரடியாக சேதம் எதுவும் ஏற்படுத்தாத குண்டு வெடிப்புகளும் நிறையவே இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபே ராஜபக்ஷ பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இந்த சின்ன வெடிப்புக்கள் எல்.ரீ.ரீ.ஈ யினரால் மேற்கொள்ளப்பட்டிருக்க மாட்டாது என்ற சந்தேகம் பாதுகாப்பு அதிகாரிகளின் மனதில் இருப்பதாகவும் அதுபற்றிய விசாரனைகள் முன்னெடுக்கப்படுவதாவவும் தெரிவித்தார்.

தென்பகுதியில் குண்டுகள் வெடிப்பதை தடுக்க முடியாத பிரதமரின் ஆதங்கமமும்‚ பாதுகாப்பு செயலாளரின் சந்தேகமும் ஒருபுறம். தேசத்தின் மகுடம் கண்காட்சியானது ‘வீண் செலவு’ என்பதுடன் பாதுகாப்பு நிலைமையையும் காட்டி அரசை எச்சரிக்கும் ஐக்கிய தேசிய கட்சியும்‚ மக்கள் விடுதலை முன்னணியும் மறுபுறம். இவற்றுக்கு மத்தியில்‚ ஏல்லாவற்றையும் தொதுத்துப் பார்த்தால் தென்பகுதியின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அற்ற நிலைமை தோன்றியுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள வேண்டியுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கருத்துக் கணிப்புப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் 2007 ஆண்டு் நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட “சமாதான நம்பிக்கைச் சுட்டி” (பீ.சீ.ஐ) எனும் அபிப்பிராய ஆய்வின் சில முடிவுகள் இன்றைய நாளில் பொருத்தமற்றதாக இருந்தாலும் ஒரு ஒப்பு நோக்குக்காக பார்பது தேவையான ஒன்று. 2007 நவம்பர் மாதமளவில்‚ ‘கடந்த வருட நிலைமையுடன் ஒப்பிடும் போது நாட்டின் பாதுகாப்பு நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளதர அல்லது மோசமடைந்துள்ளதா?’ என்று பொதுமக்களிடம் கேட்டபோது 66 சதவீதமான சிங்கள மக்கள் பாதுகாப்பு நிலைமை ‘முன்னேற்றமடைந்துள்ளது’ என்று தெரிவித்திருந்தனர். ஆனால் இதற்கு எதிர்மாறாக 74 சதவீதமான மலையகத் தமிழர்கள் பாதுகாப்பு நிலைமை ‘மோசமடைந்துள்ளது’ என்று தெரிவித்திருந்தனர். இந்த வேறுபாடானது 2007 ஜூன் மற்றும் பெப்ரவரி ஆகிய மாதங்களிளும் காணப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலும் மற்றும் கொழும்பு நகரத்திலும் உள்ள தமிழர்களில் 77 சதவீதமானவர்கள் பாதுகாப்பு நிலைமை ‘முன்னேற்றமடைந்துள்ளது’ என்று தெரிவித்திருந்தனர். (நடைமுறை சிக்கல்கள் காரணமாக கிழக்கு மாகாணத்திலும் மற்றும் கொழும்பு நகரத்திலும் தமிழர்கள் எழுமாறற்ற மாதிரி முறையினை பயன்படுத்தியே தெரிவுசெய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அம்முடிவுகளை பொதுமைபடுத்த இயலாது என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.)

இந்த சந்தர்ப்பத்தில்‚ 2002 ஆகஸ்ட் மாதத்தில் பேராசிரியர் கா. சிவத்தப்பி அவர்கள் எழுதிய ‘தமிழர்களுக்கு சமாதானம்’ (ீநயஉந கழச வாந வுயஅடைள) எனும் கட்டுரையில் ‘நாம் சமாதானம் பற்றி் பேச முற்படும் போது ஒரு கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் சமாதானம் என்பது அப்படியே சிங்கள மக்களினதும் சமாதானம் அல்ல’ என்று குறிப்பிடுகிறார். மேலும்‚ சிங்கள மக்களுக்கு‚ போர்ப் பிரதேசங்களில் இருந்து இராணுவத்தினரின் சடலங்கள் வருவது நிறுத்தப்பட்டால் அது சமாதானம். ஆனால் தமிழர்களுக்கு அப்படி அல்ல என்று விபரங்கள் தொடர்கிறது.

இதேபோன்றதொரு கசப்பான நிலைமைதான் பாதுகாப்பு என்று வரும் போதும் உணரப்படுகிறது. பொதுவாக தென் இலங்கையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் தமிழ்ர்கள் மீதான கெடுபிடிகள் அதிகரிக்கும். அதாவது தமிழர்கள் அதிகம் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் போது சிங்களவர்கள் பாதுகாப்பு நிலைமை முன்னேற்றமடைந்துள்ளது என்று உணருகிற போக்கு உள்ளது. அது மிகவும் துரதிஷ்டவசமானது‚ வேதனைக்குறியது. படையினர் நடாத்தும் சோதனைகள் ஒரு பறம் நடக்க‚ குடுக்காரர்ன்களும் கஞ்ஞாகாரன்களும் தங்களது செயற்திரனை அப்பாவித் தமிழர்களிடம் காட்டும் செயல்கள் ஆங்காங்கு இடம் பெறுவதுண்டு. ஆனால் சமீப காலமாக படையினர் சிங்கள மக்களையும் சோதனையிடுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

60 வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி கடந்த இரண்டு வருட காலத்துக்குள் இந்தச் சவாலை தட்டிக் கழிக்காமல் அதற்கு நேரடியாக முகம் கொடுத்தோம். சரித்திரத்தில் என்றுமே பெறாத வெற்றியை பயங்கரவாதத்துக்கு எதிராக எமது பதாதுகாப்புப் படையினர் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். சரித்திரத்தில் என்றுமே பெறாத தோல்வியை பயங்கரவாதம் இன்று பெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்கள் கழிய முதல் பயங்கரவாதிகளின் பிடிக்குள் இருந்த கிழக்கின் பாரிய பிரதேசத்தினை நாம் விடுவித்ததுடன்‚ பயங்கரவாதம் இரண்டு மாவட்டங்களில் மாத்திரமே இன்று உள்ளது என்று தெரிவித்தார்.

அரசாங்கம் கிழக்கு மாகானத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததைத் தொடர்ந்து வடபகுதி நோக்கிய தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக கூறிவந்தது. 60 வது சுதந்திர தினத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் இருந்து அரசினால் தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் தொடர்பான விபரங்கள் குறிக்கப்பட்ட இலங்கையின் வரைபட பதாதைகளை கொழும்பின் பல இடங்களில் காணக்கூடியதாக இருந்தது.

அதில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. 2005க்கு முன்னர் என்ற படத்தில் வடக்கு மற்றும் கிழக்கு முழுதும் சிவப்பு நிறத்திலும்‚ 2007 என்ற படத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இருமாவட்டங்கள் மட்டும் சிவப்பு நிறத்திலும் குறிக்கப்பட்டுள்ளன. 2008இன் இறுதியில் என்ற படத்தில் சிவப்பு நிறம் இல்லை அதாவது முழுநாடும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் என்பதாகவும் பதாதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அன்மையில் ஒரு சிங்கள நன்பர் இந்த பதாதைகளையும் சமீபத்தைய குண்டு வெடிப்புகளையும் பற்றி கூறுகையில் ‘தென் பகுதியை சிவப்பு நிறத்தில் தீட்ட வேண்டியுள்ளது’ என்று வேடிக்கையாகவும் வேதனையாகவும் கூறினார். பாதுகாப்பு நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளதர அல்லது மோசமடைந்துள்ளதா? இப்போது தென் பகுதியின் இந்தப் புள்ளிவிபரங்களில் நிச்சயமாக மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி.

08.02.2008