සිංහල

எல்லர புலிகளும் தமிழர்கள் இல்லை!

கொழும்பும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாழும் தமிழ் மக்களின் பதிவு சம்பந்தமான விடயங்களில் முறையான கொள்கையினை கடைப்பிடிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு குழு ஒன்றை அமைக்குமாறு உயர் நீதி மன்றத்தினால் அரசாங்கத்திற்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வர தலைமையிலான மூன்று நீதிபதிகள் முன்னிலையில் நடந்த விசாரனையிலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழர்கள் காரணமின்றி கைது செய்யப்படுகின்றமையை எதிர்த்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரனைகளின் போதே மேற்படி உத்தரவு இடப்பட்டது. கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாழும் தமிழ் மக்கள் தாம் வசிக்கும் பிரதேசத்திற்குறிய பொலிஸ் நிலையத்தில் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டிய செயல்முறை நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் வேறுபட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலைமை மேற்படி வழக்கு விசாரனையின் போது நிதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.

இதில் முகத்துவாரம் மற்றும் மருதானை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட பதிவு நடவடிக்கைகள் மிக மோசமானதாக அமைந்திருந்தது. முகத்துவார பொலிஸ் பிரிவில் விநியோகிக்கப்பட்ட பதிவு செய்யும் படிவத்தில் வங்கிக்கணக்கு விபரங்கள் கோரப்பட்டிருந்தன. மருதானை பொலிஸ் பிரிவில் தங்குவதற்கு வீசர வழங்கப்படுவது போன்று கால எல்லை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது வெளியில் தெரிந்த பிரதான வேறுபாடு.

இதைவிடவும் ஒரே பொலிஸ் நிலையத்தில் கூட வெவ்வேறு பொலிசார் வெவ்வேறு நடைமுறைகளை சொல்லி மக்களை குழப்பிவிடுவதுண்டு. இதைவிட வேடிக்கை சில சமயங்களில் ஒரே பொலிஸ்காரர் கூட முதல் நாள் ஒரு விதமும் மறு நாள் வேறு விதமாகவும் விளக்கம் தரும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் உயர் நீதி மன்றத்தினால் மனித உரிமைகள் தொடர்பான பல முக்கியமான தீர்ப்புகள் வழங்கப்பட்டன. சோதனைச் சாவடிகள்‚ இரவு நேரத்தில் வீடுகள் சோதனை செய்யப்படுதல்‚ வீதியோர வாகனத் தரிப்பு‚ கைதுசெய்யப்பட்டவர்கள் குறித்த காலத்தில் நிதீ மன்றத்தில் ஆஜர் படுத்தப்படல் போன்ற விடயங்கள் தொடர்பான தீர்ப்புகள் குறிப்பிடத்தக்கவை. சில தீர்ப்புகள் தொடர்பாக விமர்சனங்கள் செய்யப்பட்டன. வீதியோர வாகனத் தரிப்பு தொடர்பான தீர்ப்பு போக்குவரத்துப் பொலிசினால் மீறப்பட்டமையை தொலைக்காட்சி சேவை ஒன்று படம் பிடித்து காட்டியது. மேற்படி பொலிஸ் பதிவு தொடர்பான உயர் நீதி மன்ற உத்தரவினால் இதுவரை இருந்த நடைமுறையில் ஏதேனும் முன்னேற்றம்‚ ஒழுங்கு முறை ஏற்பட்டு மக்கள் முகம்கொடுக்கும் அசெளகரியம் தவிர்க்கப்படுமா‚ காட்டப்படும் வேறுபாடு நீங்குமர என பொருத்திருந்து பார்ப்போம்.

புலிகளை கண்டறியவும் கட்டுப்படுத்தவுமே இந்த பொலிஸ் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பொலிஸ் பதிவுகள் பிரதானமாக தமிழ் மக்கள் மீதே நடைமுறைப் படுத்தப்பட்டன.

அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதம மந்திரி ரட்ணசிறி விக்கிரமநாயக்க‚ புலிகளுக்கு ஆதரவாக சிங்களவர்கள் சிலரும் செயற்படுகின்றனர்‚ பாதுகாப்பு தரப்பினரில் சிலரும் புலிகளுக்கு உதவுகின்றனர்‚ இவை தொடர்பாக நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றும் கூறினார். அதற்கு முன்னர் ஹொரனையில் பொலிஸ் நிலையம் ஒன்றை திறத்து வைத்து உரையாற்றும் போது‚ சிங்கள மக்களில் சிலர் பணத்திற்காக பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கி வருகின்றனர்‚ என்றும் பிரதம மந்திரி தெரிவித்திருந்தார்.

மேலும்‚ பொதுமக்கள் எவரும் கொல்லப்படாத சிறு குண்டு வெடிப்புகள் எல்.ரீ.ரீ.ஈ யினரால் மேற்கொள்ளப்பட்டிருக்க மாட்டாது என்ற சந்தேகம் பாதுகாப்பு அதிகாரிகளின் மனதில் இருப்பதாகவும் அதுபற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபே ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இதிலிருந்து தென் பகுதியில் இடம்பெரும் தாக்குதல்களுக்கு சிங்கள மக்களின் சிலரும் உதவி செய்கின்றனர் என்பது அரச தரப்பினரால் தெளிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு அல்லது தேசிய பாதுகாப்பு என்று வரும் போது தென் இலங்கை சிங்கள மக்களின் மனங்களில் படையினரே முதலிடம் பெறுவர் என்பதில் ஐயமில்லை. அதேபோல் இந்த விடயம் தொடர்பாக தென் இலங்கை சிங்கள மக்களின் அபிப்பிராயங்களில் செல்வாக்கு செலுத்தக் கூடியவர்களில் பிரதான இடம் வகிப்பது பிக்குக்கள் என்று கூறலாம்.

சமீபத்தில் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு உதவியமை தொடர்பில் கொழும்புப் பிரதேசத்தில் பிக்கு ஒருவர் விசாரணை செய்யப்படுவதாகவும்‚ இராணுவ கப்டன் ஒருவர் உற்பட இராணுவ வீரர் ஒருவரும் விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியது. இதற்கு முன்னர் மூன்று இராணுவ வீரர்களும் ஒரு வீராங்கனையும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையிலேயே மேற்படி பிக்கு மற்றும் இராணுவ கப்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தம்புள்ள பேரூந்து குண்டு வெடிப்பு விடயம் தொடர்பாக சிங்கள பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் இங்கு கவனத்திற்குறியது.

இவை தவிர இதற்கு முன்னர்‚ விடுதலை புலிகளுக்கு உதவி புரிந்தமைக்காக தென் பகுதியை சேர்ந்த சிங்கள இனத்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து ‘சிங்களப் புலி’ என்ற சொல் மக்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் பிரபலமானது.

சிங்கள பொது மக்களுக்கு சிங்களப் புலிகள் சீரணிக்க முடியாத மிகப் பெரிய அதிர்ச்சியாகவும்‚ அரச படையினருக்கும்‚ தென் இலங்கை தலைமைகளுக்கும்‚ மிகப் பெரிய சவாலாகவும் அமைந்துவிட்டது என்பதுதான் இன்றைய நிலைமை. இந்த நிலைமை ஏற்படுவதற்கு தென்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடைமுறைகள் நேரடியாக மற்றும் மறைமுகமாக செல்வாக்கு செலுத்தியுள்ளன என்பது தென் இலங்கை ஏற்றுக்கொள்ள மறுக்கும் யதார்த்தமாகும்.

அண்மைய காலம் வரை புலிகளை தேடுகிறோம்‚ பிடிக்கிறோம் என்று அரச படையினர் காட்டிய விளையாட்டுகள் எல்லாம் தமிழர்களை மாத்திரமே மையப்படுத்தி அமைந்திருந்தமையை விசேடமாக அழுத்திக் கூறவேண்டிய தேவை இல்லை. தமிழராய் இருப்பது மட்டுமே படையினரால் சோதனைச் செய்யப்படுவதற்கும்‚ பொலிசில் பதிவு செய்யப்படுவதற்கும்‚ சிங்கள மக்களால் சந்தேகமாய் பார்க்கப்படுவதற்கும் போதுமான காரணங்களாக இருந்தது. இவ்வளவுக்கும் மத்தியில்‚ தமிழர்கள் எல்லாம் புலிகள் இல்லை என்று தென் இலங்கை தலைமைகள் இருந்தாற்போல் புராணம் பாடுவதும் உண்டு. இங்கு அழுத்தமாக குறிப்பிடவேண்டிய கருத்து என்னவெனில் இப்போது ‘எல்லர புலிகளும் தமிழர்கள் இல்லை’ என்பதே.

30 வருடத்திற்கு மேற்பட்ட தேசிய பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை முன்வைப்பதை நோக்கமாக கொண்டே சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழு அமைக்கப்பட்டது. 13ம் திருத்தச்சட்டத்தை தழுவியதாக யோசனைகளை முன்வைத்ததன் மூலம்‚ தமிழர் பிரச்சினை தொடர்பாக தென்பகுதியின் மனோநிலை‚ 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையிலேயே இருப்பதாக வெளிப்படுகிறது. இதே போல தென் இலங்கையில் புலிகளை தேடுகிற நடைமுறையும் பல வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையிலேயே இருக்கிறது என்று கூறலாம்.

இன்று அங்காங்கு ‘புலி’ வேலைகள் செய்து சிங்களவர்கள் அகப்பட்ட பிறகு கூட தமிழர்களை மையப்படுத்தி நடாத்தப்படும் தேடுதல்கள்‚ சோதனைகள் அப்படியே உள்ளன. இந்த நிலைமையினை விடுதலைப் புலிகள் துள்ளியமாக உணர்ந்து தமது நடவடிக்கைகளில் சிங்களவர்களை உள்வாங்கிக்கொண்டிருக்கலாம்.

அரசபடையினர் கிழக்கு பிரதேசத்தைக் கைப்பற்றிய பின்னர் வடபகுதியை நோக்கி தமது தாக்குதல்களை ஆரம்பித்தனர். வன்னிப்பிரதேசத்தில் தினமும் விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. வன்னி பிரதேசத்தில் வான் மற்றும் தரைபகுதியில் இருந்து கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக அரச படையினர் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் மன்னார்ப் பகுதியில் வைத்து படையினரிப் புலனாய்வுப் பிரிவினால் நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதான உருப்பினர் சால்ஸ் கொல்லப்பட்டார். புலிகளின் முக்கிய முகாம்களான எக்ஸ்ரே பேஸ் மற்றும் ராதர பேஸ் மீது வான்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தமது புலனாய்வு வசதிகளை கிழக்கு மற்றும் வடக்கு பிரதேசங்களில் செயற்படுத்தும் அரச படையினருக்கு தென் பகுதி விவகாரம் கட்டுப்பாட்டை மீறியது ஏன் என்பது ஆழமாக விவாதிக்க வேண்டிய விடயம்.

அண்மையில் ஊடகவியலாளர் மகாநாடு ஒன்றின் போது‚ வடக்கு முனைகளில் படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாததனாலேயே புலிகள் தெற்கில் பொதுமக்களை குறி வைத்து தாக்குதல்களை மேற்கொள்கிறனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இக்கருத்தை முன்னர் பல அரசியல் பிரமுகர்களும் தெரிவித்திருந்தனர்.

விடுதலைப் புலிகள் தெற்கில் தாக்குதல்களை மேற்கொண்டதன் பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணத்தை கூறுவது ஒன்றும் பெரிய விடயம் இல்லை. கிழக்கு தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அல்லது தாக்குதல்கள் தமது பக்கத்திற்கு சாதகமானதாக அமையும் போக்கை அவதானித்த சந்தர்ப்பத்தில்‚ விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று திருத்தமாக ஊகிக்க அரச இராணுவ புலணாய்வு பிரிவு தவறிவிட்டது. அல்லது பிழையான விதத்தில் ஊகம் செய்து விட்டது. விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கப்போகிறது என்பதை கணிப்பிட்டு அதனை தடுக்க தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுவிட்டு தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தால் தென் பகுதி இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு.

இந்த இடத்தில் அரச படைகள் விட்ட தவறினதும்‚ தென் இலங்கையில் தமிழர்களுக்குள் மாத்திரம் புலிகளை தேடிய தவறினதும் விளைவுகள் தான் சமீபத்திய தென் இலங்கை குண்டு வெடிப்புகள் என்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்களர என்பது சந்தேகமே. மறுபக்கத்தில் தென் இலங்கை தாக்குதல்களின் மூலம்‚ அரசுக்கு விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசியல் ரீதியான பிரசாரம் எதையும் விசேடமாக செய்ய வேண்டிய தேவை சரி செய்யப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஊடகவியலாளர் மகாநாட்டில் இராணுவப் பேச்சாளர் மேலும் கூறுகையில்‚ வடக்கில் நிலைகொண்டுள்ள படையினர் அதே பலத்துடன் புலிகள் மீது தாக்குதல்களை மேற்கொள்வர்‚ அங்கிருக்கும் படையினரை எக்காரணத்திற்காகவும் தெற்கிற்கு கொண்டுவர மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே இராணுவ முன்னெடுப்பிற்காக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைத் தாங்கிக்கொள்ள தென் இலங்கை சிங்கள மக்கள் முன்வந்துள்ளார்கள். இதே போல இராணுவ முன்னெடுப்பிற்காக தென்பகுதியின் நடக்கும் குண்டு வெடிப்புகளையும் தாங்கிக் கொள்ளுமாறு மறைமுகமாக கூறுவது போல் உள்ளது இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவின் தொனி.

மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி

15.02.2008