தமிழ், Democracy, Peace and reconciliation

அதிகாரப் பரவலாக்கத்திற்கு அரசாங்கம் தயாராகிறதா?

இலங்கை இராணுவம் கிழக்கு மாகாணம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை‚ ‘கிழக்கின் உதயம்’ என‚ கடந்த வருடம் யூலை மாதம் 19ம் திகதி‚ சுதந்திர சதுக்கத்தில் அரசு வெகு விமரிசையாக கொண்டாடியது. இவ்விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில் கிழக்கு மாகாணம் தொடர்பாக பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.

‘கிழக்கு மாகாண மக்களுக்கு தமது அடிப்படை உரிமையான வாக்கைப் பயன்படுத்தும் உரிமை கிடைக்கப்பெற்றிருந்ததா? 15 வருடங்களாக இந்த அப்பாவி மக்களின் பிரஜர உரிமை பறிக்கப்பட்டிருந்தது. பறிக்கப்பட்ட இந்த உரிமையை நாம் மீண்டும் பெற்றுக்கொடுப்போம். இந்த வருட இறுதியில் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படும். இவ்வருட இறுதியில் தமது பிரதிநிதிகளை உள்ளுராட்சி மன்றங்களுக்கும் மாகாண சபைக்கும் தேர்ந்தெடுக்கும் உன்னத உரிமை கிழக்கு மாகாண மக்களுக்கு கிடைக்கும். கடந்த காலம் முழுவதும் தேர்தல் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் இதற்கும் கனவில் பயந்ததுபோல் சத்தமிடுவார்கள். என்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 9 உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 18ம் திகதி முதல் 25ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என இவ்வருடம் ஜனவரி 12ம் திகதி‚ தேர்தல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டது. ஜனவரி 24ம் திகதி‚ சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவினர் தேசிய பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கான தனது யோசனைகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் பகுதி 3.1ல் ‘கிழக்கு மாகாணத்தில் மாகாணசபைத் தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாகவும் அந்தத் தேர்தல் உடனடியாக நடத்தத்தப்பட வேண்டும் என்றும் சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழு கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எப்படியேர மார்ச் 10ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் 9 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் 9 அரசியல் கட்சிகளும் 22 சுயாதீனக் குழுக்களுமாக 831 பேர் போட்டியிட்டனர். 14 வருடங்களுக்கு பின்னர் நடந்த தேர்தல் இது. 60 வீதமான மக்கள் தமது வாக்குரிமையை பயனபடுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம சமீபத்தில் கொழும்பில் செயற்படும் இராஜதந்திரிகள் மத்தியில் ஆற்றிய உரையில் இந்த தேர்தல் பற்றி கருத்து தெரிவிக்கையில்‚ தற்போதைய மோதல்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இயல்பு நிலையை மீளவும் ஏற்படுத்துவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்றும் அதற்காக அரசாங்கத்திடம் முறையான திட்டம் இருக்கிறது என்பதை நடந்து முடிந்த இந்தத் தேர்தல் மூலம் உள்ளுர் மற்றும் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தக் கூடியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும்‚ இதற்கு முன்னர் எல்.ரீ.ரீ.ஈ யின் அதிகாரத்தில் கீழ் இருந்த பிரதேச மக்களின் ஜனநாய உரிமைகளை மீள கொண்டு வரும் அரசின் கொள்கையில் இது ஒரு பிரதான மைல்கல் என்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (வுஆஏீ) ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்கு மாறுவதை நாம் காண்கிறோம் என்றும் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு ஏற்ப மே மாதம் நடாத்த திட்டமிட்டப்பட்ட கிழக்கு மாகாணம் முழுவதுக்குமான மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்பதை வெற்றிகரமாக நடாத்தப்பட்ட தேர்தல் சுட்டிக்காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியும்‚ தமிழர் விடுதலைக் கூட்டணியும் இத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆரம்பத்தில் இருந்து மட்டு தேர்தல் விடயத்தில் எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சி இந்த தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாக தெரிவித்தது. கிழக்கு மாகாணத்தில் செயற்பட்டு வந்த ஒரு பயங்கரவாத ஆயுதக் குழுவை அங்கிருந்து வெளியேற்றி விட்டு வேறு ஒரு பயங்கரவாத ஆயுதக் குழுவுக்கு நிர்வாகத்தை அரசாங்கம் கையளித்துள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கிறது.

தொடர்கின்ற ஐக்கிய தேசிய கட்சியின் குற்றச்சாட்டில்‚ சுயாதீனமானதும் நியாயமானதுமான தேர்தல் கிழக்கில் நடத்தப்படவில்லை. பொலிசாரால் சுயாதீனமாக இயங்க முடியவி்ல்லை. என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில்‚ ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் 17வது திருத்தச்சட்டத்தின் படி அரசியலமைப்பு சபையினை நியமிக்குமாறு வலியுருத்திவருவது ஞாபகப்படுத்தத்தக்கது. அரசியலமைப்பு சபையினை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். பின்னர் அரசியலமைப்பு சபையினால் சுயாதீன ஆணைக்குழுவுக்கான நியமனங்கள் செய்யப்பட வேண்டும். தேர்தல்‚ போதுச் சேவைகள்‚ பொலிஸ்‚ மனித உரிமைகள்‚ இலஞ்ச ஊழல்‚ நிதி மற்றும் எல்லைகள் நிர்ணயித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பானதாக அவ் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமையும்.

இவை இப்போது நடைமுறையில் இல்லாததால் ‘சுயாதீனமானதும் நியாயமானதுமான தேர்தல் கிழக்கில் நடத்தப்படவில்லை’‚ ‘பொலிசாரால் சுயாதீனமாக இயங்க முடியவி்ல்லை’ என்ற ஐக்கிய தேசிய கட்சியின் குற்றச்சாட்டுகளை முழுவதுமாக பொய் என்று மறுப்பதில் அரச தரப்பிற்து சங்கடங்கள் நிறையவே உள்ளது.

இந்த நிலையில்‚ உடணடியாக மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கான அறிவிப்பை விடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு ஜனாதிபதி அறிவித்திருந்தார். இதற்கு அமைய அண்மையில்‚ கிழக்கு மாகாண தேர்தலுக்கான வேட்பு மனுக்களை மார்ச் 27ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி வரையான காலத்தில் தாக்கல் செய்யலாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் தயாநந்த திசாநாயக்க அறிவித்திருந்தார். மாகாண சபைத் தேர்தலுக்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மே மாதத்தில் நடாத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும் தழிழர் விடுதலை கூட்டணியும் போட்டியிடாமைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் போட்டியிடுவதே காரணம் என்று தெரிவித்திருந்தது. கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக்குழுக்களை நிராயுதமாக்கும் படி உத்தரவிடுமாறு கோரி பவ்ரல் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் நடாத்தும் சூழ்நிலை இல்லை என பல சிவில் சமூக அமைப்புகள் சுட்டிக்காட்டி இருந்தன.

ஆகக் குறைந்தது எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னராவது ‘ஆயுதக்குழு’ எனும் விடயத்தில் அரசு தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன் ‘அரசியலமைப்பு சபை’யினையும் நியமிக்குமாயின் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் உற்பட அரச தரப்பினர் அனைவரும் சொல்லும் ’ஜனநாயகம்’ தொடர்பில் முன்னேற்றகரமான நடவடிக்கையாக அதை கொள்ள முடியும்.

இது இவ்வாறு இருக்க‚ சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள் 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்டது என்பது தெரிந்ததே. குழுவின் அறிக்கையில் பகுதி 1.3ல் 1987 ஜுலையில் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் 1978 அரசியலமைப்புக்கு 13வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த திருத்தத்தின் விளைவாக இலங்கை முழுவதுமாக மாகாண சபகள் அமைக்கப்பட்டன. ஒற்றையாட்சி அரசியல் அமைப்பின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப்பட்டது. பரவலாக்கம் செய்யப்பட்ட அதிகாரங்கள் இருபட்டியல்களின் கீழ் அதாவது‚ மாகாணங்களுக்கான பட்டியல்‚ பொதுப் பட்டியல் என்பவற்றின் கீழ் குறித்துரைக்கப்பட்டன. ஏனைய சகல அதிகாரங்களும் ஒரு ஒதுக்கீட்டு பட்டியலின் ஊடாக மத்திய அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டன. இந்த மூன்று பட்டியல்களிலும் உள்ளடக்கப்படாத எந்தவொறு விடயதானமும் அல்லது செயற்பாடும் ஒதுக்கீட்டு பட்டியலின் கீழ் வருபவையாக கருதப்படும்‚ என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும்‚ அறிக்கையின் பகுதி 3ல் ‘அரசியல் அமைப்புக்கான 13வது திருத்தத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் பட்ச அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப்படுவதை அனுமதிப்பதற்கு தேவையான விசேட ஏற்பாடுகள்’ என்று குறிப்பிடுகிறது.

சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள் மற்றும் கிழக்கு மாகாணசபைக்காக தேர்தல் ஆயத்தங்கள் என்பவற்றை வைத்து நோக்கும் போது அரசு‚ ‘மாகாண சபைகளுக்கான அதிகார பரவலாக்கம்’ விடயத்தில் முன்னோக்கி நகர்வதாக தோன்றுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் மாகாணசபைக்கான அதிகாரங்கள் பற்றிய மக்களின் எண்ணங்கள் அபிப்பிராயங்கள் தொடர்பான சில ஆய்வு தரவுகளை பார்ப்பது பொருத்தமாக அமையும் என நம்புகிறோம்.

2004 மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கருத்துக் கணிப்புப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் நடாத்தப்பட்ட சமாதான செயற்பாடு தொடர்பிலான அறிவு‚ மனோநிலை‚ மற்றும் பழக்கங்கள் பற்றிய அளவீடு (முயுீளு) முடிவுகளில் மாகாணசபைக்கான அதிகாரங்கள் பற்றி பொது மக்களின் தெரிவித்த கருத்துகளில் புள்ளிவிபரங்கள் உள்ளன. மாகாணசபைக்கான அதிகார பரவலாக்கத்திற்கு ஆதரவாக மற்றும் எதிராக செயற்படும் இரு தரப்பினருக்கும் இத்தரவுகள் முக்கியமானதாக அமையும்.

‘மத்திய அரசின் அதிகாரங்களைக் குறைத்துக் கொண்டேனும் உள்ளுராட்சிஃ பிரதேச ஆட்சி அதிகார சபையின் அதிகாரங்களை கூட்ட வேண்டும்’ என்ற கருத்தை 49.4 சதவீதமான மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

‘சில உள்ளுராட்சிஃ பிரதேச ஆட்சியின் அதிகாரங்கள் மற்றயதை விட கூட்டப்பட வேண்டும்’ என்ற கருத்தை 26.3 சதவீதமான மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

2003ம ஜூன் மாத ஆய்வில் 41 சதவீதமான மக்களே நாட்டின் உள்ளுராட்சி நிறுவனங்கள் அதாவது மாநகர சபை‚ நகர சபை‚ பிரதேச சபை‚ மற்றும் மாகாண சபை ஆகிய நிறுவனங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

இவ் ஆய்வானது யாழ்ப்பாணம்‚ வவுனியா‚ திருகோணமலை‚ மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் அரச கட்டுப்பாட்டு பிரதேசங்கள் அடங்களாக நாட்டின் 22 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது.

மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி.
21.03.2008