தமிழ், Economic issues, Gampaha

நீர்கொழும்பு கடோல்கல கிராமத்தில் வீடமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு கிராமவாசிகள் எதிர்ப்பு

நீர்கொழும்பு‚ தலாதூவ கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட கடோல்கல பிரதேசத்தில் களப்புப் பகுதிக்கு அருகில் உள்ள நிலப்பரப்பில் இருக்கும் கடற்தாவரங்களை அழித்து‚ மண் நிரப்பி அப்பகுதியில் வீடமைப்புத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளமைக்கு எதிராக கடோல்கல கிராமவாசிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
சுனாமி ஏற்பட்டபோது கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்து நாசம் செய்யாமல் கடோல்கல பிரதேசவாசிகளின் உயிரையும்‚ உடைமைகளையும் காத்த கடற்தாவரங்களை அழித்து வீடமைப்பு வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளமைக்கு கிராமவாசிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் 9 ஏக்கர் நிலப்பிரப்பில் பரந்து விரிந்துள்ள கடற்தாவரங்களை அழித்து அவ்விடத்தில் மண் நிரப்பி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்திற்கே கிராமவாசிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி கடோல்கல கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தெரிவிக்கையில்‚
“சுனாமியின்போது கடோல்கல கிராம மக்களின் உயிர்களையும்‚ உடைமைகளையும் காத்தது இக்கடற்தாவரங்களேயாகும். இப்போது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்காக என்ற பெயரில் இங்குள்ள கடற்தாவரங்களை அழிக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரகாலமாகிறது.
இந்த வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்‚ அதற்கான காரணங்களை விளக்கியும் கடந்த வருடம் நவம்பர் மாதம் நாங்கள் ஜனாதிபதிக்கும்‚ கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சருக்கும்‚ இயற்கை வளங்கள்‚ சுற்றாடல் அமைச்சருக்கும் (பாட்லி சம்பிக ரணவக்க) கடிதம் அனுப்பியிருந்தோம். ஆயினும்‚ வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக கடற்தாவரங்களை “பெக்கோ” இயந்திரங்கள் மூலம் அழிக்கும் வேலைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
“இலங்கையில் உள்ள இருபத்திரண்டு (22) வகையான கடற்தாரங்களில் இருபது (20) வகையான கடற்தாவர வகைகள் இங்குள்ளன.
“கடற்தாவரங்கள் அழிக்கப்பட்டு வீடுகள் கட்டுவதற்கு முயற்சிகள் நடப்பதால்‚ மீண்டும் ஒரு முறை சுனாமி வந்தால் இக்கிராமத்தவர்களை யாரும் காப்பாற்ற முடியாது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. ஆனால்‚ அதற்காக இன்னொரு அழிவுக்கு இடம்கொடுக்க முடியாது.” என்றார்.
பிரதேசத்தில் வசிக்கும் மீனவர் ஒருவர் இதுபற்றி தெரிவிக்கையில்‚
“1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய டென்ஸில் பெர்னாந்து அவர்களின் முயற்சியினால் அப்போது ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ளதாக இருந்த இப்பிரதேசத்தில 400 ஏக்கர் நிலம் சுத்தம் செய்யப்பட்டு மண் நிரப்பப்பட்டு குறைந்த வருமானமுடைய மக்களுக்கு காணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.
ஆயினும்‚ அப்போது வகுத்த திட்டத்தின்படி அல்லாமல் தற்போது 800 ஏக்கர் வரையான பரப்பளவு காணி சுத்தம் செய்யப்பட்டு (கடற்தாவரங்கள் அழிக்கப்பட்டு) மண் நிரப்பப்பட்டு வருமாணம் குறைந்த 1100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பரம்பரையாக களப்பினில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களுக்கு கடற்தாவரங்கள் கொண்ட சிறிய ஒரு பிரதேசமே தற்போது எஞ்சியுள்ளது.
கடற்தாவரங்கள் அழிக்கப்படுவதன் காரணமாக மீன்கள்‚ இறால்கள்‚ நண்டுகளின் உற்பத்தி மிகவும் குறைந்து போயுள்ளது. அவைகளின் இனப்பெருக்கத்திற்கு கடற்தாவரங்கள் மிக அவசியமானதாகும். அதனால்‚ களப்பினில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
“சுனாமியின்போது கிராம மக்களின் உயிரையும் சொத்துக்களையும் காத்தது இக்கடற்தாவரங்களாகும். இதுபற்றி வெளியில் உள்ள பலருக்கும் தெரியாது.” என்றார்.
இப்பிரச்சினைக்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இக்கிராமவாசிகளின் வேண்டுகோளாகும்.

கலாநெஞ்சன் நீர்கொழும்பு