தமிழ், Human Security, Peace and reconciliation

ஏ-9 வீதி திறக்கப்பட வேண்டும்‚ கடற்றொழில் செய்வதற்கான தடைகள் நீக்கப்பட வேண்டும் என்பதே யாழ். மாவட்ட மக்களின் பிரதான கோரிக்கைகளாகும்

– தேசிய மீனவர் ஒத்துழைப்பு அமைப்பின் பேச்சாளர் ஹேர்மன் குமார

யாழ். மாவட்ட மக்களின் நிலைமையை அங்கு சென்று நேரில் பார்த்தபோது எங்களுக்கு அதிர்ச்சியாகவும்‚ பரிதாபமாகவும் இருந்தது. அவர்கள் பெரும் துன்பத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றபோதிம்‚ தெற்கில் இருந்து சென்ற சிங்களவர்களான எம்மை அன்போடு வரவேற்று உபசரித்ததைப் பார்த்தபோது நாம் நெகிழ்ந்து போனோம்.
ஏ-9 வீதி திறக்கப்பட வேண்டும்‚ கடற்றொழில் செய்வதற்கான தடைகள் நீக்கப்பட வேண்டும் என்பதே யாழ். மாவட்ட மக்களின் பிரதான கோரிக்கைகளாக இருந்தன.
– இவ்வாறு தேசிய மீனவர் ஒத்துழைப்பு அமைப்பின் பேச்சாளர் ஹேர்மன் குமார கூறினார்.
யாழ். மாவட்ட கிராமிய தொழிலாளர் சமூகத்திற்கு மனித உரிமைகள் சம்பந்தமாக விளக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு‚ அதுபற்றி தெற்கில் உள்ள ஊடகங்களுக்கும் மக்களுக்கும் விளக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பின்போதே அவர் மேறகண்டவாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பு அண்மையில் நீர்கொழும்பு பிரதேச சிங்களப் பத்திரிகையான “மீபுர” பத்திரிகை காரியாலயத்தில் நடைபெற்றது. சந்திப்பு நிகழ்வில் பிரதேச ஊடகவியலாளர்கள்‚ கத்தோலிக்க மதத்தலைவர்கள்‚ நகர முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அங்கு ஹேர்மன் குமார தொடர்ந்து உரையாற்றுகையில்‚
யாழ். மாவட்ட மீனவர்கள் வாரத்திற்கு ஒரு நாளே கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியும். அதுவும் ஒன்றரை கிலோமீற்றர் தூரத்திற்குள்ளேயே மீன்பிடிக்க முடியும். அத்துடன்‚ முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையே மீன்பிடிக்க முடியும். மீன்பிடிக்கச் செல்லும் தினத்தில் ஒருவரின் தினசரி வருமானம் 140 ரூபாவாகும்.
அங்குள்ள மீனவர்கள்‚ விவசாயிகள்‚ தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவும்‚ வருமானம் இன்மையாலும் அவர்கள் படும் அவலத்தையும்‚ துன்பத்தையும் வார்த்தைகளால் கூறமுடியாது.
ஒருபக்கம் இராணுவத்தினரின் மேல் உள்ள பயம் அல்லது அச்சுறுத்தல்‚ மறுபக்கம் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் என அவர்கள் உளவியல் ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு 7 மணிமுதல் அடுத்த நாள் காலை 5 மணிவரை ஊரடங்குச் சட்டம் அங்கு நடைமுறைப்படுத்தப்படாலும் அவர்கள் பிற்பகல் மூன்று நான்கு மணிக்குள்ளேயே வீடுகளுக்குள் அடைந்துவிடுகிறார்கள். கடைகள் மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதேவேளை‚ அங்குள்ள இராணுவத்தினரும் பயத்துடனேயே இருக்கிறார்கள். இராணுவத்தினருக்கு யுத்தம் செய்து போதுமாகிவிட்டது. அவர்களுடன் உரையாடியபோது இதை எம்மால் உணர முடிந்தது.
யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 24 மீனவர் சங்கத்தலைவர்கள் இதுவரை காணாமல் போயுள்ளார்கள் அல்லது மரணமாகியுள்ளார்கள்.
சிங்கள மக்கள் அனைவரும் இனவாதிகள் அல்ல என்பதை நாங்கள் அவர்களுக்கு எடுத்துக் கூறினோம் என்றார்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு அமைப்பின் நிர்வாக செயலாளர் அங்கு உரையாற்றுகையில்‚
அங்குள்ள சிறுவர்கள் பலர் பாடசாலைக்குச் செல்வதில்லை. அதற்கு வறுமை மட்டும் காரணமல்ல. அங்கு நிலவும் சூழ்நிலையே அதற்கான காரணமாகும். குறிப்பாக பெண் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லப் பயப்படுகிறார்கள். பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதே அதற்கான பிரதான காரணமாகும்.
தற்போது‚ தெற்கில் உள்ள சிங்கள மக்கள் யாழ்ப்பாணம் செல்வது கிடையாது. அங்குள்ள உண்மையான நிலைமை இங்குள்ள சிங்களப் பத்திரிகைகளில் வெளியிடப்படுவதில்லை.
இங்கிருந்து விமானம் மூலமாக அங்கு செல்வதும்‚ பின்னர் அங்கிருந்து இங்கு வருவதும் நரக வேதனையை அனுபவிப்பதற்கு சமமானதாகும் என்றார்.

“நீர்கொழும்பு நேசன்”