සිංහල, Colombo, Democracy, Jaffna, Peace and reconciliation

வேதாலம் மீண்டும் முருங்கை மரத்தில்…..

‘யுத்த நிறுத்த ஒப்பந்தம்’ 2008 பெப்ரவரி மாதம் 22ம் திகதி வரை இருத்திருக்குமானால் ஆறு வருடம் பூர்த்தியாகியிருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக ஜனவரி 16ம் திகதியுடன் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வருகிறது. கடந்த 2ம் திகதி‚ ஒப்பந்தத்தின் விதி 4.4 ல் குறிப்பிடப்பட்டிருந்தது போலவே முறைப்படி நோர்வே அரசாங்கத்திற்கு விலகல் பற்றிய அறிவித்தல் இலங்கை அரசாங்கத்தால் விடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் கண்காணிப்பாளர்கள் வெளியேறுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஒப்பந்தத்தினை அமுல்ப்படுத்துவதில் காட்டப்படாத ‘ஒப்பந்த விதிமுறைகளை கடைபிடித்தல்’ ஒழுக்கம் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதில் கடைபிடிக்கப்பட்டுள்ளது. வாழும் போது ஒருவாய் தண்ணிரோ‚ ஒருபிடி சோறேர தராது‚ செத்த பின்னர் முறைப்படி ‘கொள்ளி’ வைப்பது போல ஒப்பந்தத்தின் ஈமக்கிரியைகள் முறைப்படி சிறப்பாக நடைபெறுகின்றன என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தில் இருந்து விலகுதாக அறிவித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பினர் பற்றி சற்று மேலோட்டமாகவேனும் பார்ப்பது பொருத்தமாக அமையும். முதலாவது‚ மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தரப்பு. மக்கள் விடுதலை முன்னணி‚ ஜாதிக ஹெல உருமய உள்ளடங்களாக மஹிந்த சிந்தனையை ஏற்றுக்கொண்ட கட்சிகளும்‚ அரசின் யுத்த முன்னெடுப்புகளை ஆதரிக்கின்ற தென் இலங்கை சிங்கள சமூகத்தவர்கள்‚ மற்றும் அமைப்புகள் இந்தத் தரப்பில் அடங்கும். இரண்டாவது எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி‚ எதிர்த்தரப்பு. மூன்றாவது தரப்பு‚ சர்வதேச சமூகம். இதில்‚ நோர்வே உற்பட சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் நிறுவனங்கள் என்பன அடங்கும். இதை இலங்கை விவகாரத்தில் சம்பந்ப்பட்ட மூன்றாந்தரப்பு என்றும் கொள்ளலாம்.

அரசாங்கத்தரப்பு

கடந்த கால ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமானது எதிர்காலம் பற்றிய தொலைநோக்கற்ற குறுகிய நோக்கத்தை கொண்ட‚ துரிதமாகச் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையான ‘போர் நிறுத்த உடன்படிக்கை’ செய்ததன் விளைவாக பல பிரச்சனைகள் எழுந்துள்ளன‚ என்றும் எந்த பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கும் இடமளிக்காத வகையில் போர் நிறுத்த உடன்படிக்கையை மீளத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பபடும்‚ என்றும் மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம் முன்வைத்த 12 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதன் பேரில்‚ கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் விடுதலை முன்னணி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியது. அந்நிபந்தனைகளில் ‘யுத்த நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக திருத்தியமைக்கப்படல் வேண்டும்’ மற்றும் ‘உதவி வழங்குனரான நோர்வே செயற்படுவதை மாற்றியமைப்பது பற்றி மீள்பரிசீலனை செய்தல் வேண்டும்’ ஆகிய யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான நிபந்தனைகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருட இறுதியில் நடந்த வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பிற்கு தாம் ஆதரவு வழங்ககுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி 4 நிபந்தனைகளை முன்வைத்திருந்தது. ‘யுத்த நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்’ என்பது அவற்றுள் ஒன்று. யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாள் முதல் மக்கள் விடுதலை முன்னணி அது பற்றி விமர்சனம் செய்து வந்தமை தெரிந்ததே.

மக்கள் விடுதலை முன்னணி தவிர ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிய மற்றைய முக்கிய கட்சியான ஜாதிக ஹெல உருமயவும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசு விலக வேண்டும்‚ இராணுவ நடவடிக்கை முழுமையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

மக்கள் கருத்து

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபையின் கீழ் இயங்கும் சுயாதீனமான கருத்துக் கணிப்புப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற “சமாதான நம்பிக்கைச் சுட்டி” (ீஊஐ) எனும் அபிப்பிராய ஆய்விவு முடிவுகளில்‚ யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக மக்கள் கொண்டுள்ள அபிப்பிராயங்கள் பற்றி வெளியான சில புள்ளிவிபரங்களை பார்ப்போம்

யுத்த நிறுத்த ஒப்பந்தம் சாதாரண பிரஜைகளுக்கு பல நன்மைகளைத் தந்துள்ளது என சிலர் குறிப்பிடுகிறார்கள்‚ அதே போல் இன்னும் சிலர் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தமக்கு எந்தவித நன்மையையும் தரவில்லை எனக் கூறுகிறார்கள். உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு‚ 2005 மார்ச்‚ 2006 பெப்ரவரி‚ 2007 பெப்ரவரி ஆகிய காலப்பகுதியில் தென் இலங்கை சிங்கள சமூகத்தவர்கள் முறையே 61.4‚ 74.3‚ 38.6 சதவீதமானவர்கள் ஆம்‚ இலங்கையருக்கு நன்மை ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளனர். இந்த சதவீதம் 2007 ஜுன் மாதத்தில் 29 க்கு குறைந்துள்ளது. இக்காலப்பகுதியில் தென் இலங்கை சிங்கள சமூகத்தவர்களில் இரண்டில் ஒரு பகுதியினர்‚ யுத்த நிறுத்த ஒப்பந்தத்தால் நன்மை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்துடன் தொடர்பான விடயங்களின் மீது பொதுமக்கள் கொண்டிருந்த அபிப்பிராயம் எதிர்மறையாக மாறுவதற்கு அரசாங்கம்‚ மக்கள் விடுதலை முன்னணி‚ ஜாதிக ஹெல உருமய‚ மற்றும் இவை சார்ந்த ஊடகங்கள் என்பன பெரும் பங்காற்றியுள்ளன. பாரியளவில் பல்வேறு பிரசார உத்திகள் பயன்படுத்தப்பட்டே மக்கள் கருத்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக திரட்டப்பட்டது. எப்படியேர தற்போதைய நிலையில் தென் இலங்கை சிங்கள சமூகம் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டுவது தெரிகிறது.

தென் இலங்கை சிங்கள சமூகத்தவர்கள் மத்தியில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பிரபல்யம் குறைவாக இருந்த சந்தர்பத்திலேயே அரசாங்கம் ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளது. அந்த வகையில் அரசாங்கம் சமயோசிதமாக செயற்பட்டுள்ளது. யுத்த முன்னெடுப்பை ஆரம்பம்தொட்டு வலியுருத்தி வருகின்ற மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உருமய போன்ற கட்சிகளின் கூட்டமைப்பில்‚ அக்கட்சிகளின் இணங்கிய மஹிந்த சிந்தனையினை முன்வைத்து ஆட்சியை பிடித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது புதினமான ஒன்று அல்ல. இவ்வளவு காலம் விலகுவதற்கு பொருத்தமான தருனம் வரும்வரை காத்திருந்தது என்று கொள்ளலாம்.

வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் ‘மக்கள் விடுதலை முன்னணி’ மற்றும் ‘ஜாதிக ஹெல உருமய’ போன்ற கட்சிகளின் கொண்டுள்ள நிலைப்பாட்டினையே தற்போது பெரும்பான்மையான தென் இலங்கை சிங்கள மக்கள் கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ‘மக்கள் விடுதலை முன்னணி’ மற்றும் ‘ஜாதிக ஹெல உருமய’ போன்ற கட்சிகள் தம்மை விட்டு பூரணமாக விலகி விடாமல்‚ தமது எல்லைப்பரப்பிலேயே இருக்குமாறு வைத்துக் கொள்ளவும் ஏற்றதாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

ஒருவகையில் பார்த்தால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகும் தீர்மானம் இக்கட்சிகளை திருப்திப் படுத்துவதற்காக எடுக்கப்பட்டிருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த வரிசையில் அடுத்ததாக இருப்பது புலிகள் தடை மற்றும் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவைக் (யுீசுஊ) கலைத்தல் என்பனவாகும். என்ன நடக்கும் என்று பொருத்திருந்து பார்ப்போம்.

எதிர்த்தரப்பு

இலங்கை அரசாங்க தரப்பில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஐக்கிய தேசியக் கட்சி இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்‚ யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசாங்கம் விலகியதன் மூலம் சர்வதேச ரீதியில் இலங்கை பலவீனம் அடைந்து‚ அந்த வீழ்ச்சியின் மூலம் சர்வதேச ரீதியில் புலிகள் பலம் பெரும் நிலை ஏற்பட்டுள்ளது என எச்சரித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி கூறும் காரணம் தற்போது உள்ள பிரபலமான விடயமான புலிகளின் பலம் – பலவீனம் தொடர்பாக பின்னப்பட்டுள்ளது. அவ்வளவே.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 2002 டிசம்பரில் ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்றாம் சுற்று பேச்சுவார்தைகளின் முடிவில் இரு தரப்பினரும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ‘சமஷ்டி’ முறையின் அடிப்படையிலே அரசியல் தீர்வு தேடுவதாக ஒத்துக்கொண்டனர். அப்போது அரசாங்க தரப்பாக ஐக்கிய தேசியக் கட்சி இருத்தது. பேச்சுவார்தையில் ‘சமஷ்டி’ முறை அரசியல் தீர்வுக்கு இணங்கிய ஐக்கிய தேசியக் கட்சி‚ சென்ற வருட செப்டெம்பரில் ‘சமஷ்டி’ முறையில் இருந்து நழுவியது. தாம் முன்னின்று செய்த ஒப்பந்தமாய் இருந்தாலும்‚ அதிலிருந்து அரசாங்கம் விலகியமை பற்றி விமர்சனம் செய்வதற்கான தார்மீக யோக்கியதை‚ ஒஸ்லேர இணக்கப்பாட்டில் இருந்து விலகிய ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை.

மூன்றாந்தரப்பு

அமெரிக்கா‚ கனடா‚ அவுஸ்ரேலியா‚ நோர்டிக் நாடுகள்‚ ஜப்பான் போன்ற மற்றும் பல உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது விசனத்தை தெரிவித்திருந்தார். மேலும் ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் விளைவாக‚ கொழும்பு உற்பட வடக்கு மற்றும் நாடு முழுவதுமாக வன்முறை அதிகரிக்கும் என்று ஆழ்ந்த கவலையை தெரிவித்திருந்தார். மற்றும் பல சர்வதேச அமைப்புகளும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தன.

ஆழ்ந்த கவலை வெளியிடும் மூன்றாம் தரப்பு அமைப்புகள்‚ ஒப்பந்தம் சிறுகச் சிறுக மீறப்பட்டு வந்த சந்தர்ப்பங்களில் அதனை தடுக்க தமது வலிமைக்குட்பட்ட காத்திரமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. அப்போது சும்மர இருந்து விட்டு இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறது. இப்போது கவலை தெரிவித்துள்ள சில நாடுகள் கண்டும் காணாமல் இருந்தமை‚ மற்றும் அரசியல் ராஜதந்திரம் என்ற நொண்டிச்சாட்டுப் போர்வையில் பக்கசார்பாக செயற்பட்டமை‚ என்பன ஒப்பந்தம் மோசமான நிலையை அடைய சாதகமான காரணியாக அமைந்ததாக கொள்ளலாம்.

முடிவுறை

இது இவ்வாறு இருக்க‚ இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர்‚ தமிழர்கள் முகம் கொடுத்த அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு தரப்புகளுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் தென் இலங்கை சிங்களத் தலைமைகள் ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளமை தெரிந்ததே. பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் 1957‚ டட்லி சேனாநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் 1965‚ இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 என்பவற்றை குறிப்பிடலாம். இவற்றில் எந்த ஒரு ஒப்பந்தமும் நிலைக்கவில்லை என்பதுதான் தமிழர் விவகார ஒப்பந்த வரலாறுகளின் யதார்த்தம்.

இந்த ஒப்பந்த வரிசையில் 2002 யுத்த நிறுத்த ஒப்பந்தமும் உத்தியோக பூர்வமாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பிரதான பிரதிபலன்களாக இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் உடன்பாடு கண்ட இரண்டு விடயங்களை குறிப்பிடலாம். ஒன்று‚ சுனாமிக்குப் பின்னரான முகாமைத்துவ கட்டமைப்பு. (ீ-வுழுஆளு – 2005) இது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் முடக்கப்பட்டது. மற்றயைது‚ ஒஸ்லேர இணக்கப்பாடு.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் தென் இலங்கை சிங்கள தரப்புகள் கட்சி‚ காலம்‚ விடயம் என்று எந்த காரணிகளிலும் சாராமல்‚ தமிழர் விவகாரம் தொடர்பாக செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறியுள்ளன. இணக்கப்பாடுகளை மீறியுள்ளன.

கடந்த கால ஒப்பந்த வரலாறுகளை பார்த்தால் தென் இலங்கை சிங்கள தரப்புகள் கட்சி‚ காலம்‚ விடயம் என்று எந்த காரணிகளிலும் சாராமல்‚ தமிழர் விவகாரம் தொடர்பாக செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறியுள்ளன. இணக்கப்பாடுகளை மீறியுள்ளன என்பது வெளிப்படையான யதார்த்தம்.

இந்த மூன்று தரப்பைத் தவிர இன்னுமொறு முக்கியத் தரப்பு உளளது. அது விடுதலைப் புலிகள். இலங்கை அரசியலில் பெரும்பாலும் சகல தீர்மானங்களிலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் செலவாக்கு செலுத்துவதை மறுப்பதற்கு இல்லை. பொது மக்கள் மத்தியில் நடத்தப்படும் தேர்தல் முதல்‚ பாராளுமன்றத்தில் நடத்தப்படுப் தேர்தல் வறை ஏதேர ஒரு வகையில் விடுதலைப் புலிகள் சம்பந்தப்படுகின்றனர்‚ அல்லது சம்பந்தப்படுத்தப் படுகின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது விடுதலைப் புலிகள் விரித்த வலையினாலேயே ஜனாதிபதியின் வெற்றி சாத்தியமானது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசாங்கம் விலக தீர்மானித்ததன் மூலம்‚ விடுதலைப் புலிகள் வைத்த பொறியில் அரசாங்கம் சிக்கிக் கொண்டது என்று கூறினால்‚ அதனை உறுதியாக மறுப்பது முடியாத காரியம்.

மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி

11.01.2008