සිංහල, Eastern Elections, Human Security, Peace and reconciliation

மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தல் காலத்தில் இடம்பெற்றவைகளில் சில…….

மேலிடத்து உத்தரவை மீறமாட்டோம்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்டேர செலுத்தி அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் தனது குடும்பத்தை கொண்டுசெல்கிறார். காலையில் ஆட்டேர ஓடி உழைத்தால்தான் அன்று வீட்டில் அடுப்பு எரியும் நிலை.

இந்த நிலையில்‚ இவருக்கும் பெருமளவு பணம் சம்பாதிக்க ஆசை ஏற்பட்டுவிட்டது போலும். பெருமளவு பணம் என்றால் வேறு என்ன அரசியலில்தான். கொழும்பில் ஆட்டேர செலுத்திக்கொண்டிருந்த இம்தியாஸ் என்பவர் தேர்தலில் போட்டியிட்டு தற்போது கொழும்பு மாநகர சபையின் மேயராக பதவி வகித்துவருகின்றமை இவருக்கு தெரிந்துவிட்டது போல். இதனால்‚ அவருக்கும் ஒரு அவா. மட்டக்களப்பு உள்ளுராட்சித் தேர்தல் இடம்பெறவிருக்கும் நிலையில் அவர் போட்டியிட முன்வந்துள்ளார். வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதனால் அரசினால் பாதுகாப்புக்காக இரண்டு பொலிஸார் வீதம் வழங்க தீர்மானக்கப்பட்டது. தற்போது இந்த நபருக்கும் பாதுகாப்புக்காக இரண்டு பொலிஸார்.

ஆட்டேர செலுத்தினால்தான் வீட்டில் அடுப்பு எரியும் என்ற நிலையில் காலையில் வேலைக்காக ஆட்டோவை எடுத்தவுடன் இந்த இரண்டு பொலிஸாரும் அதில் ஏறி உட்கார்ந்துவிடுவார்களாம். எங்கு சென்றாலும் பின்னால் அவர்கள்‚ பாதுகாப்புக்கா. இதனால்‚ எவரும் ஆட்டோவில் ஏறுவதில்லையாம். வருமானமும் இல்லை. இவர்களின் செயற்பாடுகளினால் கடுப்பாகிப்போயுள்ள இவர் தனது வருமானம் பாதிக்கப்படுவது குறித்து பலமுறை தெரிவித்திருக்கின்றபோதிலும் அவர்களின் பதில்‚ மேலிடத்து உத்தரவை நாங்கள் மீறமாட்டோம்.

எனக்கு அரசியல் தேவையா? எனக்கு ஏன் இந்த கதி? என்ற கேள்விகளை தன்னைத் தானே அவர் கேட்டுக்கொள்கிறாராம்.

கஷ்டங்களையெல்லாம் பொறுத்துக்கொண்டு எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால் அப்புறம் என்ன காசு மழைதான்.

ஆண்களாகும் பெண்கள்

மட்டு. உள்ளுராட்சி சபைத் தேர்தலின் பிரசார நடவடிக்கைகள் தற்போது களை கட்ட ஆரம்பித்துள்ளன. எவ்வளவுதான் அச்சுறுத்தல்‚ கடத்தல்கள்‚ கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றாலும் பிரசார நடவடிக்கைளுக்காக வீடு வீடாக வேட்பாளர்கள்‚ அவர்களின் ஆதரவாளர்கள் செல்கின்றமை குறையவே இல்லை. குறிப்பாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத பகுதிகளில் நடைபெறும் வழமையான தேர்தல் போன்றே அங்கேயும் தேர்தலுக்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இந்த அளவுக்கு பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற போதிலும் அவ்விடங்களில் ஆண்களைக் காணமுடியாத நிலை காணப்படுகிறது. முழுக்க முழுக்க பெண்களே பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அங்கு ஆண்கள் இல்லாத நிலையே இதற்குக் காரணம்.

கொலைசெய்யப்படுகின்றனர்‚ கடத்தப்படுகின்றனர்‚ அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்‚ பாதுகாப்பு கருதி வெளியிடங்களுக்கு இடம்பெயர்கின்றனர். இந்த நிலையில் அங்கு எப்படி ஆண்கள் இருப்பார்கள். அவர்களின் அனைத்து வேலைகளையும் தற்போது பெண்கள்தான் மேற்கொள்ள வேண்டிய நிலை. ஆண்களாகின்றனர் பெண்கள்.

கடத்திக் கொலை

தாண்டியடி கிராமத்தில் கணவனும் மனைவியும் இரவு உணவு உட்கொண்டிருந்தவேளை திடீரென வீட்டினுள் நுழைந்த கும்பலொன்று பணம்‚ நகை ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றதுடன்‚ கணவனையும் கடத்திச் சென்றுள்ளனர். இரண்டு நாட்களின் பின்னர் அந்த நபர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னணி பற்றி தெரியாத நிலையில் குடும்பத்தினர் துயரத்துடன் திண்டாடுகின்றனர். இந்தச் சம்பவத்தை அடுத்து மக்கள் பெரும் பீதியுடன் காணப்படுகின்றனர். கொலை அரங்கேற்றம் அங்கு தொடர்ந்த வண்ணமேயுள்ளன.

அப்பட்டமான அதிகரிப்பு

உயிருக்கு அச்சுறுத்தல்‚ வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்று இக்கட்டுக்குள் வாழும் மக்களை பஸ் உரிமையாளர்கள் ஒரு புறம் வாட்டி வதைக்கின்றனர். நிர்ணயி்க்கப்பட்ட தொகைக்குப் பதிலாக கூடுதலாக பஸ் கட்டணத்தை அறவிடுவதனால் பெரும் இன்னலுக்கு அவர்கள் முகம்கொடுக்கின்றனர். இந்த நிலை தனியார் பஸ்களில் மட்டுமே என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அசாதாரண அதிகரிப்பு தொடர்பாக பஸ் நடத்துநரிடம் பயணிகள் கேட்டால் இது தொடர்பாக அவர்கள் மோசமான முறையில் பேசுகிறார்கள் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தூரப் பகுதி ஒன்றுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களில் 8 ரூபாவும்‚ தனியார் பஸ்களில் 10 ரூபாவும் அறவிடுகின்றனர். ஆனால்‚ குறிப்பிட்ட இந்த வாகனத்தில் (30ஸ்ரீ 3960) 15.2.2008 அன்று இந்தத் தூரப் பகுதிக்காக 15 ரூபர அறவிடப்பட்டுள்ளது. இது பற்றி குறித்த பயணி பஸ் நடத்துநரிடம் கேட்டபோது அவர் முறையற்ற விதமாக பேசியுள்ளார்.

பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கு‚ ஏற்கனவே பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிக்கின்ற நிலையில் மீண்டும் ஏன் இந்த உயர்வு? இது மக்களின் இரத்தத்தை உறிஞ்சு குடிப்பதைப் போன்றது. கொஞ்சம் மக்களின் நிலையை கவனத்திற்கொண்டால் நல்லது.