සිංහල, Jaffna, Life quips, Stories from the silent

யுத்தத்தின் குழந்தைகள்

தம்பி சிகரட் எங்க? பய்ட் கொண்டு வாங்க. தம்பி தண்ணி கொண்டுவாங்க. கொகாகோலர எங்க?

ஹோட்டல் ஒன்றில் வேலைசெய்யும் சிறுவன் ஒருவனிடமே இவ்வாறு கேட்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் இடம்பெறும் வன்முறைகளைக் கண்காணிப்பதற்காக எமது அலுவகத்திலிருந்து குழுவொன்று அங்கு சென்றிருந்தது. அந்தக் குழுவில் நானும் மட்டக்களப்பிற்குள் புதிய முகமாக நுழைய அனுமதிக்கப்பட்டேன்.

அங்கு நாங்கள் தங்கி வேலைசெய்ய வேண்டியிருந்ததால் ஹோட்டல் ஒன்றில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. நாங்கள் சென்ற நாளன்று இரவு சக நண்பர்கள் (அதிகாரிகள்) மது அருந்துவதற்குத் தயாரானார்கள். அப்போதுதான் அந்த சிறுவனைக் கண்டேன். பார்ப்பதற்கு 8‚ 9 வயதுபோல் இருக்கும்.

அந்தச் சிறுவனைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக எனது சக நண்பர்கள் இருவரும் ஆர்வம் காட்டினர்.

தம்பி உங்கட பெயர் என்ன? ஜனாத் என்றான் சிரித்த முகத்துடன். நாங்கள் சொல்லும் ஒவ்வொரு வேலையையும் சுறுசுறுப்புடனும் சந்தோஷத்துடனும் செய்தான். அந்தச் சிறுவனை எனது அருகில் உட்கார வைத்தோம். அவன் எங்களிடம் சொன்னவை‚

நான் 1993ஆம் ஆண்டு அன்னமலையில்தான் நான் பிறந்தேன். எனது அப்பர யுத்தத்தின்போது இறந்துவிட்டார். நான் இப்போது அம்மாவுடன்தான் இருக்கிறேன். எனக்கு அக்கர ஒருவரும்‚ தம்பி ஒருவரும் இருக்கின்றனர். அக்கர கொழும்பில் வீடு ஒன்றில் வேலை செய்கிறார். தம்பிக்கு ஒரு வயது. நான் வேலைசெய்து அனுப்பும் பணத்தைக் கொண்டுதான் அம்மர வாழ்ந்து வருகிறார். எனக்கு மாதம் 3‚000 ரூபர சம்பளமாகக் கிடைக்கிறது. இந்தப் பணம் ஒரு மாதத்துக்குப் போதாததால் அம்மர கூலி வேலைக்கும் போவார். சில நேரம் பட்டினியாகவும் இருப்பார்.

நான் இங்கு வேலைக்கு வருவதற்கு முன் கூலிவேலைதான் செய்தேன். சில நேரங்களில் அம்மாவுக்கும்‚ எனக்கும் வேலை இருக்காது. அந்த நாள் பட்டினிதான். அக்கர வருடத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார். காளிகோயில் திருவிழாவன்று.

இவ்வாறு தனது உருக்கமான கதையை தொடர்ந்துகொண்டே இருக்க திடீரென நாங்கள் இடையில் புகுந்து‚ மீண்டும் உனக்கு பாடசாலைபோக ஆசையர என்று கேட்டோம்.

ரொம்ப ஆசைதான். ஆனால்‚ நான் பாடசாலை சென்றால் அம்மாவைப் பார்ப்பது யார்? அதனால்தான் வேலை செய்கிறேன்.

இங்கிருக்க விருப்பமா? வீட்டில் இருக்க விருப்பமா? ஏன்று மீண்டும் கேள்வி ஒன்றை தொடுத்தோம்.

வீட்டில் இருக்கத்தான் பிடிக்கும். ஆனால்‚ இங்கிருந்தால் உணவு கிடைக்கிறது. சம்பளமும் கிடைக்கிறது. அம்மாவுக்கும் சாப்பிட முடிகிறது. எனக்குக் கிடைக்கும் ‘டிப்ஸ்’ ஐயும் உண்டியல் ஒன்றில் சேமிக்கிறேன் என்று பொறுப்புள்ள குடும்பத் தலைவனாய்ப் பேசுகிறான் அந்தச் சிறுவன்.

எப்போதாவது வீட்டுக்குப் போவாய் என்றோம். வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை. காளி கோயில் திருவிழாவுக்கு கட்டாயம் செல்வேன். காளி அம்மாவுக்கு சேவை செய்ய எனக்கு ஆசை – என்றான் ஒரு பக்தனாக.

இந்தச் சிறுவன் குறித்து நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்டோம். சிறுவன் கூறியதற்கும்‚ இவர் கூறியதற்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாத்தின் அம்மாவும் அப்பாவும் யுத்தத்தின்போது வெட்டிக்கொல்லப்பட்டனர். அப்போது இவனின் வயது 17 நாட்களாகும். இவனை பெரியம்மாதான் (அம்மாவின் அக்கா) வளர்த்தாள். பெரியம்மாவுக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களை இவன் சொந்த சகோதரர்களாக நினைத்துக்கொண்டிருக்கிறான். அவர்களையும் வளர்த்துக்கொண்டு இவனையும் வளர்த்தெடுத்தாள் அந்த அம்மா. அதற்கான நன்றிக்கடனை தற்போது இவன் செலுத்திக்கொண்டிருக்கிறான். எனக்கு இவனை வேலையில் வைத்துக்கொள்ள விருப்பம் இல்லை. சிறிய வயது என்பதால். ஆனால்‚ குடும்ப நிலையை நினைத்தே வேலையில் வைத்திருக்கிறேன். மாலை நேரத்தில் வேலை அதிகமாக இருப்பதால் இவனை காலை நேரம் பாடசாலைக்கு அனுப்பவும் திட்டமிட்டிருக்கிறேன். – என்றார் அவர்.

கல்முனைப் பகுதியில் அமைந்துள்ள அன்னமலை கிராமம் யுத்தத்தின்போது பெரிதும் பாதிக்கப்பட்டது. அன்னமலை என்ற பெயர் வந்ததற்கான காரணம் ஒன்றும் இருக்கிறது. அன்னம் (சோறு) நிறைந்திருக்கும் மலைப் பகுதி என்று அர்த்தப்படுகிறது. முன்பு பசுமையான பகுதியாக இக்கிராமம் காணப்பட்டுள்ளது. ஆனால்‚ அங்கு தற்போதேர பட்டினி நிலை.