සිංහල, Colombo, Corruption, Economic issues

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும் ஐக்கிய தேசியக் கட்சியின் கையாலாகாத எதிர்ப்பும்

இலங்கையில் இன்றுள்ள தேசிய ரீதியில் முக்கியமான பிரச்சினைகள் என்ன என்று பார்த்தால்‚ மற்றைய பல விடயங்களுடன் இனப்பிரச்சினை அல்லது இலங்கையின் சமாதானச் செயற்பாடு அல்லது மோதல்‚ விலைவாசி உயர்வு அல்லது பொருளாதாரம்‚ சட்டமும் ஒழுங்கும் அல்லது மனித உரிமை மீறல்கள்‚ ஊடக சுதந்திரம் போன்றவை‚ மற்றும் ஊழல் என்பவற்றை கட்டாயம் குறிப்பிடாக வேண்டும்.

இந்த பிரச்சினைகளுடன் கடந்த வாரம் நாட்டின் பல பாகங்களில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ள நிலைமையும் சேர்ந்துகொண்டது. இந்த வெள்ளத்தினால் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கருத்துக் கணிப்புப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் அண்மையில் வெளியிடப்பட்ட 2008 பங்குனி் மாத “சமாதான நம்பிக்கைச் சுட்டி” (பீ.சீ.ஐ) ஆய்வு முடிவுகளில்‚ அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய தேசிய ரீதியில் பிரச்சினைக்குரிய விடயமாக பொருளாதாரத்தை 28.1 சதவீதமான தென் இலங்கை சிங்கள மக்கள் குறிப்பிடுள்ளனர். இவ்வாறே‚ முஸ்லிம் மக்கள் 33.5 சதவீதத்தினரும்‚ மலையகத் தமிழர்கள் 27.4 சதவீதத்தினரும்‚ தமிழர்களில் 21.8 சதவீதத்தினரும் பொருளாதாரத்தை குறிப்பிடுகின்றனர்.

மூன்று தசாப்த காலமாக தொடருகின்ற யுத்தம்‚ அவ்வப்போது ஆங்காங்கு இடம் பெறுகின்ற குண்டு வெடிப்புகள்‚ மற்றும் யுத்தம் தொடர்பிலான இழப்புக்களுக்கு மத்தியிலும்‚ தென் இலங்கை சிங்கள மக்களில் 19.8 சதவீதமானவர்கள் மட்டும் இலங்கையின் சமாதானச் செயற்பாட்டையும்‚ 22.7 சதவீதமானவர்கள் மட்டும் வடக்கு கிழக்கில் காணப்படும் மோதல் என்பதனையும் குறிப்பிட்டுள்ளனர்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பில் எழுகின்ற பிரச்சினைகளை சமாளிக்க யுத்தம் என்கிற விடயம் எவ்வாறு சாதுர்யமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது அந்த விடயங்களை சற்று அவதானத்துடன் கவணிப்பதன் மூலம் எவறும் எளிதாக விளங்கிக்கொள்ளலாம்.

அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய தேசிய ரீதியில் பிரச்சினைக்குரிய விடயமாக வடக்கு கிழக்கு யுததமும்‚ சமாதானச் செயற்பாடும் இருக்கையில் பொருளாதாரத்தை மக்கள் குறிப்பிடுகிறார்களாயின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் அவர்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஊகிக்கக் கூடியதாய் இருக்கும்.
உண்மையில் கடந்த சில காலமாக விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் சீவியம் நடாத்திக்கொண்டு வந்தனர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது. இதற்கு முன்னர் குறுகிய கால இடைவெளியில் பல தடைவைகள் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது. பொதுவாக எரிபொருட்களில் விலை அதிகரிக்கப்பட்டதும்‚ இயல்பாகவே மற்றைய பொருட்களின் விலை முக்கியமாக போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கும் என்பது கடந்த காலங்களில் எரிபொருட்களின் விலை அதிகரித்த சந்தர்ப்பங்கயளில் அனுபவிக்கப்பட்ட விடயம். இம் முறையும் அது விதிவிலக்கு இல்லை.

இந்த எரிபொருற்களின் விலையேற்றத்தை கண்டிக்கும் வகையிலான எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை 3ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி நடாத்தியது. நண்பகல் பன்னிரண்டு மணிக்கு நாடு முழுவதும் பிரதான பாதைகளில் பயணம் செய்யும் வாகனங்களை ஐந்து நிமிடங்களுக்கு அந்தந்ந இடத்தில் நிறுத்தி‚ ஒலி எழுப்பியும் முகப்பு விளக்குகளை எரியவிட்டும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு கேட்கப்பட்டிருந்தது.

சம்பவ தினத்தன்று நாட்டின் பல பாகங்களிலும்‚ முக்கியமாக தலைநகரின் குறிப்பிட்ட சில இடங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான உறுப்பினர்கள் தலைமையில் இவ் எதிர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. லிப்டன் சுற்று வட்டத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.

இது தவிர‚ வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கடந்த மாத இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கொழும்ப கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து நகரசபை மண்டபம் வரையில் மாட்டுவண்டி பயணம் ஒன்றை நடாத்தியிருந்தனர். அதற்கு முன்னர் சட்டி உடைப்பு போராட்டம். அதற்கும் முன்னர் தேங்காய் உடைப்பு போராட்டமும் நடாத்தப்பட்டமையை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை எதிர்க்க வேண்டியது கட்டாயம் தேவையான ஒன்று என்பதற்கு மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது. ஆனால்‚ அதற்கு தெரிவு செய்யப்படும் முறைகள் மற்றும் அவை மேறகொள்ளப்படும் விதம் என்பன‚ ஒரு எதிர்ப்பு ஆரப்பாட்டம் அல்லது எதிர்ப்பு நடவடிக்கை ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல மாறாக மக்களுக்கு வெறுப்பேற்றுகிற கோமாலித்தனமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது என்றால் இது மிகைப்படுத்தப்பட்ட வர்ணிப்பு அல்ல.

ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே முன்னெடுக்கப்பட்டாலும் அது சிறிதளவிலேனும் நிறைவேறியதாக தெரியவி்ல்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபலத்தை குறைப்பதற்கு அக்கட்சிக்கு எதிராக இவ்வாறான நடவடிக்கைகளை அரசு மிகத் திறமையாக கையாள்வதை காணக்கூடியதாக உள்ளது.

மக்களை வெகுவாக பாதித்துள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு விடயத்தை கையில் எடுத்த ஐக்கிய தேசியக் கட்சி‚ அதனை திறமையாக பயன்படுத்தாமை கட்சியின் திறமை மீது சந்தேகம் கொள்ள போதுமான காரணியாக கொள்ளக்கூடியது. இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் இருப்பை வெளிப்படுத்துவதாக மட்டுமே உள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பிலேனும் அரசு உணரும்படியாக அழுத்தம் கொடுக்க பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினாலேயே முடியவில்லை என்கிற நிலையில்‚ யுத்த முன்னெடுப்பை வரவேற்கும் மக்களுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை தாங்கிக்கொள்வது தவிர வேறு வழி இல்லை.

மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி