සිංහල, Colombo, Governance

மாகாணசபைத் தேர்தலிலும் மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலே…

1987ம் ஆண்டு ஜே. ஆர் ஜயவர்தனாவுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து‚ மாகாணசபைக்கு அதிகாரங்களை பகிர்தல் அடிப்படையில் இலங்கை அரசியலமைப்பில் 13வது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பிரதான நோக்கம் அதிகாரங்கள் முழுவதும் மத்தியில் குவிக்கப்பட்ட நிலையில் ஒற்றை ஆட்சி முறைமை நிலவுகின்ற நாட்டில் மக்களின் அபிலாஷைகளை திருப்திப்படுத்துவதில் தோல்வி கண்டதை தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தியினை அடையும் பொருட்டு நிர்வாக ரீதியிலான அதிகாரப் பகிர்வு தொடர்பில் வற்புறுத்தல்கள் அதிகரித்தன. இந்த பின்னணியிலேயே மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மாகாணசபை முறைமைமையை அல்லது 13வது திருத்தச்சட்டத்ததை முழுமையாக செயற்படுத்துவது தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட‚ இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தரப்பினர் என்ற வகையில் தற்போதைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிக பொறுப்பு‚ ஈடுபாடு‚ அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் என்று‚ அதிகாரப் பகிர்வை ஆதரிக்கும் மற்றும் வற்புறுத்தும் தரப்பினரின் எதிர்பார்ப்பு வியப்புக்குறியது அல்ல.

ஆனால்‚ நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் வட மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணசபைகளுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேற்பாளர்களாக முறையே முன்னால் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவையும் பிரபல சிங்கள சினிமர நடிகர் ரஞ்சன் ராமநாயக்கவையும் போட்டியிட வைத்ததன் மூலம்‚ மாகாணசபை முறைமையை அல்லது 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விமர்சிக்கும் நிலை உருவானது.

பொதுவாக இலங்கையில் தேர்தல் பிரசாரங்களில் காணக்கூடிய தனிப்பட்ட ரீதியிலான விமர்சனங்களை தவிர‚ இந்த இருவரில் எவரும் தாம் போட்டியிட்ட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான விமர்சன விடயமாக இருந்தது.

அதிகாரங்களை பகிர்தல் எனும் கருத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட மாகாணசபை தேர்தலில் அவ்வவ் பிரதேசத்தை சார்தவர்களுக்கு அதிகாரத்தை பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும். ஆனால் ஐக்கி தேசியக் கட்சியேர கொழும்பை மையமாக கொண்டவர்களை இறக்குமதி செய்து போட்டியிட வைக்கிறது. இதன் மூலம் அதிகாரம் தமது பிரதேசத்திடம் இல்லாமல் பிற பிரதேசத்திடம் இருக்கும் நிலைமையே ஏற்படும் என்று விமர்சனம் செய்யப்பட்டது.

வெளிப் பிரதேசம் சாரந்த வேட்பாளர் என்கின்ற விடயம் குறித்து விமர்சனம் செய்தவர்களின் பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ‚ ஸ்ரீ லங்கர சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். மாகாணசபை தொடர்பில் உள்ள உண்மையான அக்கரையின் அடிப்படையில் நோக்குவோமாயின் வேறு பிரதேசத்தை சார்ந்த நபரை வேட்பாளராக நியமித்தது ஒரு குறையே.

இருந்தாலும்‚ ஜானக பெரேராவும் ரஞ்சன் ராமநாயக்கவும் தாம் போட்டியிட்ட மாகாண மக்களின் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த செய்தி மாகாணசபை ஆட்சி அதிகாரத்துக்காக போட்டியிட்டு வெற்றி பெற்ற தரப்பினரை கூட சங்கடப்பட வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு குறிப்பாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் மேற்படி ஐக்கிய தேசியக் கட்சி முதன்மை வேட்பாளர்கள் இருவருக்கும் இதுவே முதல் தேர்தல் என்பதுடன் இருவரும் தாம் போட்டியிட்ட மாகாணங்களுக்கும் புதியவர்களே‚ அதாவது ஆளுங்கட்சியினரின் விமர்சன மொழியில் சொல்வதானால் இறக்குமதி செய்யப்பட்ட போட்டியாளர்கள்.

எதிர்த்தரப்பில் புதுமுகம் போட்டியிட்ட போதும்‚ ஆளுந்தரப்பை சேர்ந்த‚ வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களினது அதிகாரத்தில் இதுவரை இருந்த இரு முதலமைச்சர்களாலும் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற முடியாமல் போனமை தொடர்பில் அவர்கள் சார்ந்த கட்சி கவனம் செலுத்துவது கட்சிக்கு ஆரோக்கியமான விடயமாக அமையும். அத்தோடு‚ இவர்களை இறக்குமதிகள் என்று கின்டல் செய்த ஆளுங்கட்சியினரின் விமர்சனம் அவ்வளவு எடுபடவில்லை என்பதே யதார்த்தம்.

அடுத்த பக்கத்தில்‚ நடத்து முடிந்தது மாகாணசபைத் தேர்தலாக இருந்தாலும்‚ அந்த தேர்தலுக்கு பாவிக்கப்பட்ட பிரசார உத்தியானது‚ மாகாணசபைக்கு உள்ள அதிகாரங்கள் அல்லது மாகாணசபையின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட விடயங்களை விடவும் தேசிய மட்டத்திலான அல்லது மத்திய அரசின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தே முன்னெடுக்கப்பட்டது.

அந்தந்த பிராந்திய விடயங்கள் ஆங்காங்கு ஊறுகாய் போன்றே தொட்டுக்கொள்ளப்பட்டது. ஆளுத்தரப்பின் பிரச்சாரம் முழுமையும் தற்போது அரசு மேற்கொள்ளும் யுத்த முன்னெடுப்புகளை அடிப்படையாக கொண்டே பின்னப்பட்டிருந்தது.

அரசை பொருத்தவரையில் அது முகம் கொடுக்கும் பெரும்பாலான சிக்கல்கள் அல்லது சவால்கள் அனைத்துக்கும் கைவசம் தயார்நிலையில் உள்ள ஒரே மருந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் என்பதே. இந்த கருத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் போது அரசு வெற்றியடைந்தது என்ற இறந்தகால அனுபவம் இந்த கருத்தை முன்னிலைப்படுத்த மேலும் ஊக்கப்படுத்துகிற காரணியாக கொள்ளலாம்.

2007ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம்‚ கிழக்கு மாகாணசபைத் தேர்தல்‚ மக்கள் விடுதலை முன்னணியின் வேலை நிறுத்த முஸ்தீபு‚ வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு போராட்டங்கள்‚ போன்ற அனைத்து விடயங்களுக்கும் சிங்களத்தில் உள்ள பிரபல மூட்டைப் பூச்சி கதையை (மக்காகே கதாவ) போல விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் பயன்படுத்தப்பட்டமை தெரிந்ததே. இந்த வரிசையில் சமீபத்திய வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களினது தேர்தலும் சேர்ந்துகொண்டது.

பொதுவாக இலங்கையை பொருத்தவரை ஜனாதிபதி‚ தனது ஆட்சி பற்றி பொதுமக்களின் அபிப்பிராயம் என்ன என்பதை அறிந்துகொள்ளும் ஒரு செயல்முறையாக இவ்வாறான தேர்தல்களை நடாத்தப்படுவது ஒரு வழக்கமாக இருப்பதாக குறிப்பிடப்படுவது அறிந்ததே. இந்த வகைத் தேர்தல் முன்னைய ஜனாதிபதிகளின் காலப்பகுதியிலும் நடாத்தப்பட்டது. தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது செயற்பாடுகள் குறித்து மக்களின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்வதற்காகவே தேர்தல் நடாத்தப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் தொடர்பில் ஊடகங்கள்‚ முக்கியமாக அரச ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை வைத்துப் பார்கின்ற போது‚ இந்த தேர்தல் பிரசாரங்களில் அரச தரப்பின் பிரதான அமைச்சர்கள் அதிகமாக பங்குபற்றியிருந்தமையை கவனிக்கக் கூடியதாக இருந்தது.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த விசேட செய்தியில் ‘இது பாதுகாப்பு படையினரின் முயற்சிக்கு கிடைத்த உந்து சக்தியாகும்’ என்று தெரிவித்திருந்தார். இந்த வெற்றி பற்றி விமர்சித்த மக்கள் விடுதலை முன்னணி தலைவர் சோமவன்ச அமரசிங்க ‘கிடைத்துள்ள வெற்றியானது இராணுவத்தினருக்கான வெற்றியே அன்றி அரசாங்கத்துக்குறிது அல்ல’ என்று தெரிவித்திருந்தார்.

இதன் நிலையில்‚ மாகாணசபை முறைமையில் தோற்றுவிக்கப்பட்டதன் அடிப்படை நோக்கம் அப்படியே ஓரங்கட்டப்பட்டு‚ மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலே மாகாணசபை தேர்தலிலும் செயற்படுத்தப்படுகிறது என்று கூறினால் அது சாலவும் பொருந்தும்.

மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி