සිංහල, Colombo, Democracy, Human Rights

ஆப்பு வைக்கும் அமைச்சர் போகொல்லாகம

இலங்கையில் இன நெருக்கடியோ. மொழிப் பிரச்சினையேர இல்லை என்று வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கடந்த 20ஆம் திகதி அமெரிக்காவில் தமது கருத்தை தெரிவித்திருந்தார். மேலும் மொழி என்பது தேசிய ஒன்றுபடுத்தலின் பிரதான ஒரு காரணி எனவும் இலங்கையில் பொலிஸ் சேவை உட்பட பொதுச் சேவைகளை மும்மொழியிலும் நடைமுறைப்படுத்த பெருந்தொகையான நிதியை செலவிட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றை சரியான முறையில் தெரிந்த ஒருவர் இவ்வாறு தெரிவிப்பது சிறு பிள்ளைத்தனமான கருத்து என்றே கூற வேண்டும் அன்றும் சரி இன்றும் சரி இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு முற்றுமுழுதும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளே! 1956இல் தனிச்சிங்களச் சட்டம் உருவாக்கப்பட்டது முதல் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள அதிகாரிகளை நியமித்தது வரை அரசாங்கங்கள் மேற்கொண்டவை இன ரீதியான‚ மொழி ரீதியான பாகுபாடு என்றே கூறவேண்டும். அது மட்டுமல்லாது பல்கலைக் கழக தெரிவு முறை‚ அரச அலுவலகங்களில் நியமனங்களை பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் தமிழர்களுக்கு இழைத்த‚ இழைக்கின்ற அநீதிகளின் ஒரு விளைவே இன்று இடம்பெறும் யுத்தம். அது மட்டுமல்ல போகொல்லாகம அமைச்சரின் அரசாங்கத்தை சேர்ந்த ஒரு அமைச்சரே மேர்வின் சில்வா. அண்மையில் ஒரு ஊடகத்தில் பிரசித்தமாக கூறிய ஒரு காரணியை இங்கு கூற வேண்டும். “தமிழர்களை ஒழிக்கும் யுத்தமே தற்போது இடம்பெறுகிறது” எனக் கூறினார். இந்தக் கூற்று தொடர்பாக எந்தவொரு அமைச்சரோ‚ மந்திரியேர தமது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. இந்தவொரு காரணியே போதும் இன்று இலங்கையில் தமிழர்களை அழிக்கும் செயற்பாடே இடம்பெறுகின்றது என்பதற்கு மேலும் தற்போதைய அரசாங்கம் பலாத்காரமாக தமிழர்களை கொழும்பிலிருந்து விரட்டியமையை யாரால் மறக்க முடியும். சட்டம் தெரிந்த எத்தனையேர சட்டத்தரணிகள் பாராளுமன்றில் இருந்தாலும் நீதிமன்றம் கூறியதன் பின்னர் அது தவறு என மன்னிப்பு கேட்டது கேலிக்கூத்தான விடயம் என்று தான் கூற வேண்டும்.
குண்டடிபட்டு இறந்த சிங்கள குழந்தையை தூக்கி எடுத்த ஜனாதிபதியின் செயலை முன்பக்கத்தில் பிரசுரித்த சிங்கள ஊடகங்களும்‚ தமிழ் குழந்தைகள் இறந்த நேரம் அதை சுட்டிக்காட்டக்கூட மறந்தமை இனப்பாகுபாட்டை காட்டவில்லையா? இலங்கையில் இடம்பெறும் சம்பவங்களில் ஒரு சில மாத்திரமே இங்கு கூறப்பட்டன. இன்னும் எவ்வளவேர உள்ளது. இந்த தவறுகளுக்கு ஒரு புறம் சிங்கள தலைமைகளுக்கு மாத்திரம் குறை சொல்வதும் தவறு. ஏனெனில் எமது சமூகத்தில் தமது பதவிகளுக்காக தனது இனத்தையே காட்டிக்கொடுக்கும் “எட்டப்பன்கள்” இன்றும் எமது சமூகத்தில் உள்ளனர் இவர்களை சமூகத்திலிருந்து விலக்குவதும் இன்று அத்தியாவசிய தேவையாகவே உள்ளது.
மேலும் இலங்கையில் ஒற்றையாட்சி நிலவ வேண்டும் என்பதே தற்போதைய அரசி்ன் தீர்மானம் ஆகும். ஒற்றையாட்சி என்று குறிப்பிடும் போது அங்கு ஒரு மொழி‚ ஒரு மதம் என்பது பிரதானமாகிறது. அப்படிப் பார்க்கும் போது அந்த ஒரு மொழியும் ஒரு மதமும் எவை? சிங்கள மொழியும் பெளத்த மதமுமா? தமிழ் மொழியும் இந்து மதமுமா? தமிழ் மொழியும் இஸ்லாம் மதமுமா? தமிழ் மொழியும் கிறிஸ்தவ மதமுமா? அல்லது சிங்கள மொழியும் கிறிஸ்தவ மதமுமா?
இலங்கை ஒரு பெளத்த சிங்கள நாடு என பிரசித்தமாக கூறுகின்ற அதேவேளை அதைப் பேணிப் பாதுகாத்து வளர்க்கும் வயைில் இடம்பெறும் நடவடிக்கைகளின் மூலம் ஏனைய மொழியும் மதங்களும் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுளமை வெட்ட வெளிச்சமாக விளங்குகின்றது. இனவாதக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்துள்ள அரசாங்கம் சிறுபான்மை பெரும்பான்மை என்ற பேதத்தை என்றைக்கு ஒழிக்கின்றதேர அன்றுதான் இலங்கையில் இன நெருக்கடி மொழி நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
இங்கு மேலும் ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். இலங்கையில் மொழிக்கொள்கை உருவாக்கப்பட்ட ஐந்து தசாப்தங்களாகிவிட்டது. அமைச்சர் குறிப்பிடுவது போல் இந்த ஐந்து தசாப்தங்களில் எவ்வள நீதியை மும்மொழிக்கொள்கைக்கென செலவழித்திருக்க வேண்டும்.
1956ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற இனக்கலவரங்கள்‚ இனப்படுகொலைகள்‚ இனச் சுத்திகரிப்புக்கள்‚ இனக் குடியேற்றங்கள்‚ இனத்துவேசங்கள்‚ இன ரீதியான பல்கலைக் கழக அனுமதிகள் எனப் பலவகையிலும் “இன” ரீதியாக ஏற்பட்ட பிளவுகளின் பிரதிபலனே இன்று உக்கிரமான யுத்தமாக வெடித்திருக்கும் இனப்பிரச்சினை. இவற்றுக்கு பதில் தேடாமல் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவோம் என சர்வதேசத்திற்கு எடுத்துரைப்பதன் அர்த்தம் என்ன? யுத்தத்திற்கு பின்னணியாக இருந்த பிரச்சினைகள் அப்படியே இருக்க சிங்கள பெளத்த பேரினவாதத்தை தக்க வைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் எவ்வாறான விளைவுகள் ஏற்படப் போகின்றது என்பது கேள்விக்குறியே. இன ரீதியாக இவ்வளவு பிரச்சினைகள் இருக்க அமைச்சர்‚ இலங்கையில் இன நெருக்கடியோ‚ மொழிப் பிரச்சினையேர இல்லை என்று குறிப்பிடுவது சர்வதேச சமூகத்தை ஏமாற்ற எடுத்த நடவடிக்கைகளின் ஒரு அங்கமே.
வாக்களித்து வெற்றிபெற வைத்தவர்கள் வெகு தூரத்தில் கைகட்டிப் பார்க்க‚ குண்டு துளைக்காத வாகனத்தில் பாதுகாப்புப் படையினர் புடை சூழ மின்னல் வேகத்தில் செல்லும் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிற்கு தலைநகரான கொழும்பில் தமிழனாக பிறந்த ஒருவன் படும்பாடு எப்படி புரியும். புரிந்தாலும் புரியாத புதிராகவே இருக்கும்.

மணிமாறன்
[email protected]